Published : 17 Nov 2020 06:40 PM
Last Updated : 17 Nov 2020 06:40 PM
பொது ஊழியர்கள் குறித்து இந்தியத் தண்டனைச் சட்டமும், ஊழல் தடுப்புச் சட்டமும் என்ன சொல்கின்றன என்பதை அறியாமலே கூறியிருக்கும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அறிவு, 'ஊழல் வெட்கமறியாது' என்பதற்கான எடுத்துக்காட்டாக அதிமுக அமைச்சரவை விளங்குவதையே காட்டுகிறது என ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏ மகன் பிரபு கல்குவாரியை ஏலத்தில் எடுத்த விவகாரத்தில் சட்டமீறல் உள்ளதாகவும், அமைச்சர் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கோரியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ''சட்டம் தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார். அப்படியானால் முதலில் துரைமுருகன் உள்ளிட்ட உங்கள் கட்சியில் உள்ளவர்களை ராஜினாமா செய்யச்சொல்லுங்கள். ஸ்டாலின் சொல்லும் சட்டம் எதுவும் இல்லை'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டம் தெரியாமல் எங்கள் தலைவரை விமர்சிப்பதா? என ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி இன்று வெளியிட்ட அறிக்கை:
"பொது ஊழியர்கள் குறித்து இந்தியத் தண்டனைச் சட்டமும், ஊழல் தடுப்புச் சட்டமும் என்ன சொல்கின்றன என்பதை அறியாமலே கூறியிருக்கும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அறிவு, 'ஊழல் வெட்கமறியாது' என்பதற்கான எடுத்துக்காட்டாக அதிமுக அமைச்சரவை விளங்குவதையே காட்டுகிறது.
‘மத்திய அரசு நீட் சட்டத்தைத் திருப்பி அனுப்பியும் - அது நிராகரிக்கப்படவில்லை’ என்று பேசி அசிங்கப்பட்ட சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தன்னை ஒரு சட்டப்புலி என்று கற்பனை செய்து கொண்டிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.
'வானூர் அதிமுக எம்எல்ஏ மகன் பிரபு கல்குவாரியை ஏலத்தில் எடுக்கக் கூடாது என எந்தச் சட்டமும் இல்லை. சட்டப்புலி ஸ்டாலின் நுனிப்புல் மேயாமல் ஆவணங்களைக் கவனமாகப் படிக்க வேண்டும்' என்று எங்கள் கட்சித் தலைவரைப் பார்த்துக் கூறியதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘கடுகளவு கூட’ சட்ட அறிவு இல்லாத சி.வி.சண்முகம் எங்கள் கட்சித் தலைவரைப் பார்த்து “நுனிப்புல் மேய்பவர்” என்று கூற என்ன அருகதை இருக்கிறது? எங்கள் கட்சித் தலைவரிடம் உள்ள நேர்மை கொஞ்சம் கூட அமைச்சருக்கு இல்லை. அதனால்தான் அவருக்கு “பொது ஊழியர்” என்பதற்கும் அர்த்தம் தெரியவில்லை.
ஓர் அமைச்சர், தன் கட்சி எம்எல்ஏவிற்கே டெண்டர் கொடுக்கலாமா - அரசு குவாரியைக் கொடுக்கலாமா என்ற அடிப்படையைத் தெரிந்துகொள்ளத் தனக்கும் சட்ட அறிவு கொஞ்சம் இருக்கிறது என்று நினைப்பாரேயானால், அந்த அறிவைக் கூட சி.வி.சண்முகம் பயன்படுத்திட முன்வரவில்லை. அந்த அளவிற்கு ஊழல் என்ற கனமழையில் இன்றைக்கு நனைந்து கொண்டிருக்கிறார்.
“பொது ஊழியர்கள்” குறித்து ஊழல் தடுப்புச் சட்டமும், இந்தியத் தண்டனைச் சட்டமும் என்ன சொல்கிறது? அவர்கள் என்ன செய்யக்கூடாது என்று கூறுகிறது என்பதைக் கூட அவர் படித்தும் தெரிந்து கொள்ளவில்லை. பக்கத்தில் படித்தவர்கள் இருந்தால் - அவர்களிடமும் கேட்டு அறிந்துகொள்ள சி.வி.சண்முகம் நினைக்கவில்லை. இந்தியத் தண்டனைச் சட்டம் கூறியிருப்பதும் புரியவில்லை. இரண்டு சட்டமுமே என்னவென்று தெரியாமல் தடுமாறி - ஆவேசமாக - ஊழலை மறைக்க உரக்கப் பேட்டியளித்திருக்கிறார் அவர்.
இவரெல்லாம் சட்ட அமைச்சராக இருப்பது – தமிழகத்திற்குச் சாபக்கேடு. சட்டத்துறை வரலாற்றில் ஒரு கரும்புள்ளி! அரசாங்கத்தில் டெண்டர் எடுப்பது என்ன தவறு என்று ஒரு அமைச்சர் பேசும் அதிசயம் தமிழக அமைச்சரவையில்தான் நடக்கும். “என் சம்பந்தி டெண்டர் எடுக்கக் கூடாது’’ என்று எந்த விதி சொல்கிறது எனக் கேள்வி கேட்கும் முதல்வர் உள்ள மாநிலம் தமிழகமாகத்தான் இருக்கும். அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள தலைக்குனிவு இதுதான்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் உன்னத நோக்கமே பொதுவாழ்வில் நேர்மைதான் என்ற அரிச்சுவடி கூடத் தெரியாதவர்கள் அமைச்சர்களாகிவிட்ட அலங்கோலக் காட்சி இப்போது தமிழகத்தில் நடக்கிறது. டான்சி வழக்கில், அரசு நிலத்தை முதல்வர் வாங்கியதில் என்ன தவறு? என்று குதர்க்கமான வாதத்தை முன் வைத்தார்கள். அதையும் மீறித்தான் கீழமை நீதிமன்றம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சிறை தண்டனை விதித்தது.
உச்ச நீதிமன்றத்தில் கூட ஜெயலலிதா, அரசிடமிருந்து வாங்கிய “டான்சி நிலத்தை” திருப்பிக் கொடுத்துத்தான் தப்பித்தார். ஊரறிந்த - உலகமறிந்த தீர்ப்பைக் கூட அறியாமல் - ஒரு சட்ட அமைச்சர் கோட்டையில் நின்று கொண்டு பேட்டி என்ற பெயரில் பிதற்றியிருக்கிறார் - ஏன், உளறியிருக்கிறார் சி.வி.சண்முகம்.
‘பொது ஊழியரின் உறவினர் டெண்டர் எடுக்கக்கூடாது என்று ஏதும் விதி இல்லை’ என்று உயர் நீதிமன்றத்தில் சண்முகம், “மனமுவந்து” ஏற்றுக் கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில் வாதிட்டார். ஆனால் அந்த வழக்கில்தான் 4000 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றமே தீர்ப்பளித்தது.
அதே சொத்தை வாதத்தைத்தான் இப்போது வானூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சக்ரபாணி மகன் பிரபுவிற்கு - அதிமுக அமைச்சர் - அதுவும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சண்முகம் கொடுத்த குத்தகை விஷயத்திலும் எடுத்து வைக்கிறார். அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் குவாரிகள் - அரசின் சொத்து. அதைத் தன் இஷ்டத்திற்கு அமைச்சர் தன் கட்சி எம்எல்ஏ மகனுக்குக் கொடுக்க எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை.
ஊழல் தடுப்புச் சட்டத்தையும், இந்தியத் தண்டனைச் சட்டத்தையும், அமைச்சர்களுக்கு உள்ள நன்னடத்தை விதிகளையும் எப்போதாவது ஒருமுறையாவது புரட்டிப் பார்த்திருந்தால் சி.வி.சண்முகம் இப்படி அபத்தமான - அநாகரிகமான வாதத்தை வைத்திருக்க மாட்டார். ஊழல்வாதிகள் ‘ஊழல் தடுப்புச் சட்டங்களை’ எதிர்த்துத்தான் பேசுவார்கள். அதற்கு முதல்வர் பழனிசாமியோ - அமைச்சர் சி.வி. சண்முகமோ விதிவிலக்கல்ல என்பதுதான் இந்தப் பேட்டி சொல்லும் செய்தி.
ஆகவே சி.வி. சண்முகத்தைச் சட்ட அமைச்சராகப் பெற்றதற்கு முதல்வர் பழனிசாமி வெட்கப்பட வேண்டும். ஆனால், அவரே அந்தவாதத்தை வைத்து விட்டதால் - அவரும் வெட்கப்பட மாட்டார். ஏனென்றால் ஊழல் வெட்கமறியாது என்பதற்கு இந்திய நாட்டில் ஒரே எடுத்துக்காட்டாக விளங்குவது பழனிசாமி தலைமையிலான அதிமுக அமைச்சரவைதான்.
ஆகவே, திசை திருப்பும் வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து விட்டு - ஊழல் கரன்சியை எண்ணும் நேரத்தில் ஒரு சில நிமிடங்களையாவது சட்டப் புத்தகத்தைப் படித்துப் பார்க்க அமைச்சர் சி.வி. சண்முகம் செலவிட வேண்டும். அமைச்சர் ஒருவர் தன் சொந்தக்கட்சி எம்எல்ஏவின் மகனுக்கு அரசு குவாரியை அடிமாட்டு விலைக்குக் கொடுப்பது முறையா? அது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றமாக வருமா வராதா என்று ஆத்ம பரிசோதனை செய்து பாருங்கள்.
இல்லையென்றால் தயவுசெய்து - உங்கள் இல்லத்தில் ஒரு “போஸ்ட் பாக்ஸ்” வையுங்கள். கல்குவாரி ஏலம் குறித்து – அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரின் மகனுக்கு அளித்த குவாரி- ஏலம் எடுத்த தொகை - ஆகியவை குறித்து சட்டம் படித்த வழக்கறிஞர்களிடம் - ஏன் சட்டம் படிக்கும் மாணவர்களிடம் கூட கருத்துக் கேளுங்கள். உங்கள் “போஸ்ட் பாக்ஸில்” ஆயிரம் என்ன - லட்சம் கடிதங்கள் வந்து விழும்.
அத்தனையும் - ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கு - அதுவும் சொந்த மாவட்ட எம்எல்ஏவிற்குக் கொடுத்த குவாரி கான்டிராக்ட் மீது ஊழல் தடுப்புச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும் என்று சொல்லும். அப்போதாவது அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு “தெளிவு” பிறக்குமா என்று பார்ப்போம்”.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT