Published : 17 Nov 2020 04:24 PM
Last Updated : 17 Nov 2020 04:24 PM
தூத்துக்குடியில் இன்று மழை குறைந்திருந்த போதிலும் பல இடங்களில் குடியிருப்புகளை சூழந்த மழைநீர் வடியாததால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மாவட்டத்தில் மழைக்கு ஒரே நாளில் 10 வீடுகள் சேதமடைந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் மிக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. சாலைகள், தெருக்கள், குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் தேங்கியது. மேலும் சில பகுதிகளில் வீடுகளுக்குள்ளேயும் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை முதல் தூத்துக்குடி பகுதியில் மழையின் தாக்கம் குறைந்தது. அவ்வப்போது மட்டும் லேசான மழை பெய்தது. இன்று பகலிலும் அதே நிலை நீடித்தது. அவ்வப்போது லேசான மழை பெய்துடன், இடையிடேயே சூரியனும் தலைக்காட்டியது. இதனால் நேற்று பெய்த கனமழையில் தேங்கிய மழைநீர் வேகமாக வடியத் தொடங்கியது.
மாநகரின் மேடான பகுதிகள் மற்றும் மழைநீர் வடிகால் சீராக உள்ள பகுதிகளில் மழைநீர் இன்று காலையில் முழுமையாக வடிந்தது. அதேநேரத்தில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் தொடர்ந்து சூழந்துள்ளதால், அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்பதால் நோயாளிகள், மருத்துவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.
இதேபோல் நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. தற்காலிக பேருந்து நிலையம், திரு இருதய ஆலய வளாகம், தபால் தந்தி காலனி குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.
மழைநீர் தேங்கிய பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை பம்பிங் செய்து அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
மேலும், மாநகராட்சி மற்றும் தீயணைப்புத் துறையினர் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை அகற்றி வருகின்றனர். சில பகுதிகளில் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் தற்காலிக கால்வாய்கள் தோண்டப்பட்டு தண்ணீரை வடிய வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், தலைமை பொறியாளர் சேர்மக்கனி, மாநகர நல அலுவலர் அருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த பணிகளை மேற்பார்வையிட்டு வேகப்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக ஓடைகள், கால்வாய்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஊருணிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக ஒரே நாளில் 10 வீடுகள் பகுதியளவுக்கு சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய அக்டோபர் 28-ம் தேதி முதல் நேற்று காலை வரை மொத்தம் 33 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 31 வீடுகள் பகுதியளவும், 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.
தூத்துக்குடியில் 17 செ.மீ. மழை:
மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 14, காயல்பட்டினம் 52.2, குலசேகரன்பட்டினம் 35, விளாத்திகுளம் 23, காடல்குடி13, வைப்பார் 47, சூரங்குடி 20, கோவில்பட்டி 73, கழுகுமலை 28, கயத்தாறு 49, கடம்பூர் 73, ஒட்டப்பிடாரம் 36, மணியாச்சி 34, வேடநத்தம் 15, கீழ அரசடி 11.5, எட்டயபுரம் 59, சாத்தான்குளம் 66.8, ஸ்ரீவைகுண்டம் 49.5, தூத்துக்குடி169 மி.மீ. மழை பெய்துள்ளது. 24 மணி நேரத்தில் மொத்தம் 868 மி.மீ., மழை பெய்துள்ளது. சராசரியாக 45.68 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 169 மி.மீ., மழை பெய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT