Published : 17 Nov 2020 03:03 PM
Last Updated : 17 Nov 2020 03:03 PM

சிட்லப்பாக்கம் ஏரி புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளைக் காலி செய்யும் உத்தரவு: உயர் நீதிமன்றம் நிறுத்திவைப்பு

சென்னை

செங்கல்பட்டு மாவட்டம், சிட்லப்பாக்கத்தில் கட்டுமானங்கள் எழுப்பி, 60 ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில், ஏரி புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டியுள்ளதாகக் கூறி காலி செய்ய பொதுப்பணித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சிட்லப்பாக்கத்தில் கட்டுமானங்கள் எழுப்பி, 60 ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில், ஏரி புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டியுள்ளதாகக் கூறி, வீடுகளைக் காலி செய்யும்படி, தாமோதரன் உள்பட 154 பேருக்குப் பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.

இந்த நோட்டீஸ்களை ரத்துசெய்யக் கோரியும், பட்டா வழங்கக் கோரியும் தாங்கள் அளித்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கக் கோரியும், தாமோதரன் உள்பட 154 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “அரசின் மின்னணு ஆவணங்களின்படி இந்த நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகும். ஏரி புறம்போக்கு நிலம் எனப் பொதுப்பணித்துறை கூறுவது தவறு. மேலும், பொதுப்பணித்துறை அனுப்பிய நோட்டீஸுக்குப் பதிலளித்து ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இணைத்துப் பதிலளித்துள்ளோம்.

கரோனா மற்றும் பருவமழை காலங்களைக் கருத்தில்கொண்டு பொதுப்பணித்துறை நோட்டீஸ் மீதான நடவடிக்கையை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரசுத் தரப்பில் அளித்த பதிலில், ''நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உயர் நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு தீர்ப்புகளின் அடிப்படையிலேயே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவற்றிற்கு மனுதாரர் அளிக்கும் விளக்கங்களைப் பரிசீலித்து விரைந்து முடிவெடுக்கப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''பொதுப்பணித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு மனுதாரர்கள் அளித்த பதில் மற்றும் அவர்களின் கோரிக்கை மனுவைப் பரிசீலித்து 4 வாரங்களுக்குள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அதுவரை, பொதுப்பணித்துறை அனுப்பிய நோட்டீஸ் மீதான மேல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x