Published : 17 Nov 2020 02:48 PM
Last Updated : 17 Nov 2020 02:48 PM
கல்குவாரி உரிமம் தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், வானுர் வட்டம், திருவக்கரையில் உள்ள கல்குவாரி உரிமத்தை, அதிமுக எம்எல்ஏ சக்ரபாணி மகனுக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.
பொது ஊழியர்கள், தங்களுக்கோ, உறவினர்களுக்கோ, அரசுப் பணிகளை டெண்டர் எடுக்கக் கூடாது. அரசின் குத்தகைகளைப் பெறக்கூடாது என்ற விதிமுறை உள்ளதால், சக்ரபாணியின் மகனுக்கு அளிக்கப்பட்ட, கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இது தொடர்பாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று (நவ. 17) சென்னையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"தினந்தோறும் அறிக்கை விடுகிறோம் என்ற பெயரில் காமெடி செய்யக்கூடாது. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர், முன்னாள் மேயர், முன்னாள் துணை முதல்வர், நாளைய முதல்வர் எனப் பகல் கனவு கண்டு கொண்டிருக்கக்கூடியவர், தினந்தோறும் அறிக்கைகளை வெளியிடுகிறார். அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பாக அதில் சொல்லியிருப்பது சரியா, தவறா என்பது தனக்காவது தெரிய வேண்டும். தனக்குத் தெரியவில்லையென்றால் தெரிந்தவர்களைக் கேட்டாவது தெரிந்துகொள்ள வேண்டும்.
குற்றச்சாட்டுகளைச் சொல்ல வேண்டாம் என நான் சொல்லவில்லை. குற்றச்சாட்டுகளைக் கூற எதிர்க்கட்சித் தலைவருக்கு முழுக்க முழுக்க உரிமை உண்டு. ஆனால், அந்தக் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும்.
பொது ஊழியர்களின் உறவினர்கள் சட்டபூர்வமாக விடப்படும் ஏலத்தில் கலந்துகொள்ளக்கூடாது என எந்தச் சட்டத்திலும், எந்த இடத்திலும் சொல்லவில்லை. திமுகவில் இருப்பவர்கள் புத்தர், காந்தி, இயேசுவா? அவர்கள் யாரும் தொழில் செய்யவில்லையா? குற்றச்சாட்டைச் சொல்வதற்கு முன்பு தன் தவறுகளைப் பார்க்க வேண்டும்.
குறிப்பிட்ட சட்டப்பேரவை உறுப்பினரின் மகன், முறையாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சட்டபூர்வமான பொது ஏலத்தில் கலந்துகொண்டு ரூ.28 லட்சத்தில் எடுக்கப்பட்ட குவாரியை இரண்டாண்டு காலமாக நடத்தி வருகிறார். அதில் விபத்து நடைபெற்றிருக்கிறது. அதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு முறையான இழப்பீட்டுத் தொகையை வழங்கும். கல்குவாரியில் வேலை செய்தவர்கள் காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் சட்டத்திற்குப் புறம்பாக எதுவும் நடக்கவில்லை".
இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT