Published : 17 Nov 2020 01:37 PM
Last Updated : 17 Nov 2020 01:37 PM

அடுத்த இரு தினங்களுக்கு தென் மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

அடுத்த இரு தினங்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று (நவ. 17) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"தற்போது குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. மேலும், மாலத்தீவு முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி வரை வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் மிக கனமழையும், 15 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. பரவலான இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 17 செ.மீ. மழையும், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 14 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் இரு தினங்களைப் பொறுத்தவரையில் தென் தமிழகப் பகுதிகளில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரையில் தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

அடுத்து வரும் 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக, குமரிக்கடல், மாலத்தீவுகள், லட்சத்தீவுகள், கேரள கடற்கரை மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்றானது மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும் சமயங்களில் 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இன்றும் நாளையும் குமரிக்கடல், லட்சத்தீவுகள், மாலத்தீவுகள், கேரளக் கடற்கரை, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்கள்".

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x