Published : 17 Nov 2020 01:31 PM
Last Updated : 17 Nov 2020 01:31 PM
திண்டுக்கல்லில் அரசு புதிதாக விட்ட பேருந்தில் மழை நீர் ஒழுகியது. பயணிகள் குடை பிடித்தபடி அமர்ந்து சென்றனர். ஓட்டுநர் நனைந்தபடி ஓட்டிச் சென்றார். இதனையொட்டி தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கி அதிக அளவில் மழைப்பொழிவு உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மழை அதிகம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் இருந்து அய்யம்பாளையம் செல்லும் அரசுப் பேருந்தின் கூரை சேதமடைந்திருந்ததால் பேருந்தின் உள்ளே மழை நீர் ஒழுகியது.
அப்போது பேருந்தில் பயணித்த பயணிகள் குடைபிடித்தபடி அமர்ந்து சென்றனர். பேருந்து ஓட்டுநர் தனது தலைக்கு மேல் ஒழுகும் மழை நீரிலிருந்து தப்பிக்க குடையை தலைக்கு மேலே கட்டி வைத்து வாகனத்தை ஓட்டிச் சென்றார். இதைப் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட அது செய்தியாகி பரபரப்பை உண்டாக்கியது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
“புத்தம் புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடை பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள். உள்ளே ஒழுகியது மழை நீரா, ஊழலா?
பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?”
இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT