Published : 17 Nov 2020 11:50 AM
Last Updated : 17 Nov 2020 11:50 AM
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்புத் தொடங்கி, பள்ளிக்கல்வி நிறைவு வரை மாநில மொழிகள் குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ் மொழி கற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும், இதற்கான நிபந்தனைகளை நீக்கி, முழுநேர நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“இந்திய பாதுகாப்புத்துறையில் பணியாற்றுவோர் குழந்தைகளின் கல்வி வாய்ப்புக்காக 1963 முதல் கேந்திர வித்யாலயா மத்திய பள்ளிகள் இயங்கி வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 1243 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. வெளிநாட்டிலும் இரண்டு பள்ளிகள் செயல்படுகின்றன.
மத்திய அரசின் மனித வள வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்பள்ளிகளில் பயில்வோர்கள் மத்திய பாடத்திட்டதில் சிபிஎஸ்இ ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இருமொழிகளில் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றனர். இப்பள்ளிகளில் மாநில மொழி அல்லது தாய்மொழியை விருப்பப்பாடமாக (இது தேர்வுக்கான மதிப்பெண் கணக்கில் சேராது) மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று கேந்திரிய வித்யாலயா கல்வி விதி 112 வலியுறுத்துகிறது.
ஆர்எஸ்எஸ் வழி நடத்தும் பாஜக ஆட்சியில் மாநில மொழி கற்பிக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் கைவிடப்பட்டுள்ளது. அந்தந்த மாநில மொழி அல்லது தாய் மொழி கற்பிக்க குறைந்த பட்சம் 20 மாணவர்கள் விருப்பம் தெரிவிக்க வேண்டும். இதற்கான ஆசிரியர் ஒப்பந்தப்பணியில் பகுதிநேர ஆசிரியராக நியமிக்கப்படுவார்.
வாரத்தில் ஓரிரு நாட்களில் 40 நிமிடங்களே கற்பிக்கப்படும் என்பது போன்ற நிபந்தனைகள் தாய் மொழியை நிராகரித்து, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை திணிக்கும் முயற்சியாகும். கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்தின் இந்த அணுமுறையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது.
முதல் வகுப்புத் தொடங்கி, பள்ளிக்கல்வி நிறைவு வரை மாநில மொழிகள் குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ் மொழி கற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான நிபந்தனைகளை நீக்கி, முழுநேர நிரந்தர ஆசிரியர்களை நியமித்து, அவரவர் தாய் மொழி கற்க வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசையும், மத்திய கல்வி அமைச்சகத்தையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment