Published : 17 Nov 2020 11:35 AM
Last Updated : 17 Nov 2020 11:35 AM

பிஹார் போன்றதல்ல தமிழக அரசியல்; காங்-திமுக தொகுதி பங்கீட்டில் பேரம் இல்லை: தினேஷ் குண்டு ராவ் பேட்டி

சென்னை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதைக் கண்டறிந்து வருவதாகவும், பேரம் பேச மாட்டோம் எனவும், எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதி பங்கீடு செய்து கொள்வோம் என காங்கிரஸின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

“தினேஷ் குண்டு ராவ் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்துக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளைக் கட்சி தொடங்கியுள்ளது. வலுவான மற்றும் நல்ல வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆலோசனையும் தொடங்கியிருக்கிறது.

நாங்கள் அதை முக்கியமான, நடைமுறை கோணத்தில் பார்க்கிறோம். தொகுதிவாரியாக உள்ள எதார்த்தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மற்ற விஷயங்களைவிடக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம்.

பீகார் தேர்தல் முடிவுகள் எங்களைப் பாதிக்காது. தமிழகத்தின் அரசியல் களம் வேறு. திமுகவுடனான எங்கள் கூட்டணி ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதைப் போல் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலிலும் இணைந்து போட்டியிடுவோம்.

பீகாரில் மக்களவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி தோல்வியடைந்தது. ஆனால், தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. களத்தில் சிறப்பாகப் பணியாற்றியதோடு, மக்களின் ஏகோபித்த ஆதரவையும் எங்கள் கூட்டணி பெற்றது. அதேபோன்ற மக்கள் ஆதரவு இனியும் தொடரும்.

வாக்கு வித்தியாசம் குறையும் போது திமுக மற்றும் தோழமை கட்சிகளுக்கு வலுவூட்டக் காங்கிரஸ் கட்சியால் முடியும். கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுகவுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம்.

எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதிப் பங்கீடு நடக்கும். நேர்மையான மற்றும் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் தோழமைக் கட்சிகளை சமாதானப்படுத்த முயல்வோம். தேவையற்ற பேரங்கள் இருக்காது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக முதல்வராக அமர வைக்கக் காங்கிரஸ் பணியாற்றும்.

தமிழகத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இவ்வாறு தினேஷ் குண்டு ராவ் தெரிவித்தார்”.

இவ்வாறு காங்கிரஸ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x