Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM
மும்பையைத் தொடர்ந்து நகர்ப்புற வெள்ள முன்னெச்சரிக்கையை மேம்படுத்துவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 70 இடங்களில் புதிதாக தானியங்கி வானிலை கண்காணிப்பு மையங்களை நிறுவும் பணியை சென்னை வானிலை ஆய்வு மையம் தொடங்கியுள்ளது.
மும்பையில் கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தொடர்ந்து அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பை மாநகரமே ஸ்தம்பித்து விடுகிறது. இந்நிலையில் மும்பை மாநகராட்சி நிர்வாகம், மும்பை வானிலை ஆய்வு மையத்தை அணுகி, மும்பையில் ஏற்கெனவே 60 வானிலை கண்காணிப்பு மையங்கள் இருந்தாலும், மேலும் 100 இடங்களில் புதிதாக வானிலை கண்காணிப்பு மையங்களை நிறுவி, நகர்ப்புற வெள்ள முன்னெச்சரிக்கையை மேம்படுத்த உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது.
அதனடிப்படையில் மும்பையில்மேலும் 100 வானிலை கண்காணிப்புகருவிகள் நிறுவப்பட்டுள்ளன. அதேபோன்று ஒருநாள் மழைக்கே சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நகர்ப்புற வெள்ள முன்னெச்சரிக்கை செய்வதை மேம்படுத்த சென்னை வானிலை ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே 4 இடங்கள்
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் சே.பாலச்சந்திரன் கூறியதாவது:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பிறகு, நகர்ப்புறங்களில் ஏற்படும் வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கைகளை வழங்குவதை மேம்படுத்த திட்டமிட்டிருந்தோம். தற்போது மும்பையில் மேற்கொள்ளப்பட்டிருப்பது போன்று, சென்னையிலும் வானிலை கண்காணிப்பு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறோம். ஏற்கெனவே நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், மாதவரம், டிஜிபி அலுவலகம் ஆகிய இடங்களில் தானியங்கி வானிலை கண்காணிப்பு மையங்கள் இயங்கி வருகின்றன.
தற்போது புதிதாக 50 முதல் 70 இடங்களில் அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். சென்னையில் உள்ள ரேடார் மையத்திலிருந்து (சென்னை துறைமுகம்) 70 கிமீ சுற்றளவில் இந்த மையங்கள் நிறுவப்பட உள்ளன. இப்பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் பலவற்றில் இடம் கேட்டிருக்கிறோம். முதற்கட்டமாக 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேற்கு தாம்பரம் மற்றும் மதுரவாயலில் உள்ள இரு கல்வி நிறுவனங்களில் தற்போது நிறுவப்பட்டுள்ளன. படிப்படியாக 70 இடங்களிலும் அமைக்கப்படும்.
துல்லியமான முன்னறிவிப்பு
இந்த மையங்கள் மழைஅளவு மட்டுமல்லாது, காற்றின் வேகம், வெப்பம் குறித்த அளவுகளையும் எடுத்து, தன்னிச்சையாக கட்டுப்பாட்டு அலுவலகங்களுக்கு அனுப்பிவிடும். இதுநாள் வரை சென்னைக்கென பொதுவான வானிலை முன்னறிவிப்பு வழங்கப்பட்டு வந்தது. இனி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னைஎன பிரித்து அறிவிக்க இருக்கிறோம். இதற்கு புதிதாக நிறுவப்பட்டு வரும் வானிலை கண்காணிப்பு மையங்கள் உதவியாக இருக்கும். இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் துல்லியமான வானிலை முன்னறிவிப்பை பெற்று, பயன்பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT