Published : 17 Nov 2020 03:14 AM
Last Updated : 17 Nov 2020 03:14 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றுகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள், தெருக்கள் வெள்ளக்காடானது. ஏராளமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நகரின் அனைத்து பகுதிகளிலும் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை நேரத்தில் சற்று ஓய்ந்திருந்த மழை மீண்டும் வலுத்துக் கொண்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய கனமழை பகல் 1 மணி வரை சுமார் 4 மணி நேரம் இடைவிடாது வெளுத்து வாங்கியது. அதன் பின்னரும் லேசான மழை நீடித்த நிலையில் அவ்வப்போது பலத்த மழையும் பெய்தது.
வீடுகளுக்குள் புகுந்தது
இதனால் தூத்துக்குடி மாநகரப் பகுதி வெள்ளக்காடானது. சாலைகள், தெருக்களில் மழை நீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி அண்ணாநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பின் தரைத்தளத்தில் உள்ள சுமார் 20 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. முழங்கால் அளவுக்கு வீடுகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல் கால்டுவெல் காலனி1-வது தெரு, மரக்குடி தெரு, லயன்ஸ் டவுன் உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் போலீஸார் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
வெள்ளம் சூழ்ந்தது
அண்ணாநகர், தபால் தந்தி காலனி, லூர்தம்மாள்புரம், செயின்ட் மேரீஸ் காலனி, லயன்ஸ் டவுன், ராஜபாண்டிநகர், டூவிபுரம், சிதம்பரநகர், பூபால்ராயர்புரம் உள்ளிட்ட நகரின் அனைத்து தாழ்வான பகுதிகளிலும் முழங்கால் அளவுக்கு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும், அனைத்து முக்கிய சாலைகளிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். பல பகுதிகளில் மின்சாரமும் தடைபட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் அலுவலகத்துக்கு வரும் சாலை மழைநீரில் மூழ்கியது. இதனால் மனு அளிக்க அங்கு வந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். அரசு போக்குவரத்துக் கழக பணிமனை, மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. நேற்று பகலில் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கொட்டியதால் கிராமப்புற பகுதிகளில் உள்ள அனைத்து ஓடைகளிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஏரிகள், குளங்களுக்கு தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் வட்டங்களில் நேற்று காலை முதல் அடை மழை பெய்தது. கோவில்பட்டி பிரதான சாலை, புதுரோடு, தினசரி சந்தை சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. காலை முதல் பெய்த அடை மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. தினசரி சந்தைக்குள் தண்ணீர் புகுந்து சுமார் ஒரு அடி அளவுக்கு ஓடியது.
எட்டயபுரத்தில் நீராவி கண்மாய்க்கு ஓராண்டுக்கு பிறகு நேற்று முதல் தண்ணீர் வரத்தொடங்கியது. இதே போல், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் வட்டங்களிலும் காலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. “கார்த்திகையில் மழையில்லை என்றால் கால் வெள்ளாமைதான்’’ என்று கூறுவார்கள். கார்த்திகை மாத தொடக்கத்தில் பெய்துள்ள இந்த மழை தொடர்ந்து நீடித்தால் விவசாயம் செழிப்படையும், என விவசாயிகள் தெரிவித்தனர்.
8 மணி நேரத்தில் 122 மி.மீ. மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலான 8 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 14, காயல்பட்டினம் 52.2, குலசேகரன்பட்டினம் 35, விளாத்திகுளம் 21, காடல்குடி 13, வைப்பார் 47, சூரன்குடி 20, கோவில்பட்டி 73, கழுகுமலை 28, கயத்தாறு 47, கடம்பூர் 70, ஓட்டப்பிடாரம் 36, மணியாச்சி 34, வேடநத்தம் 15, கீழஅரசடி 4.5, எட்டயபுரம் 55, சாத்தான்குளம் 64, வைகுண்டம் 49.5, தூத்துக்குடி 122.2 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் 800.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 42.13 மி.மீ. மழை பதிவானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT