Published : 16 Nov 2020 08:48 PM
Last Updated : 16 Nov 2020 08:48 PM
கஜா புயலடித்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் 1,000 பனை விதைகளை இளைஞர்கள் இன்று (நவ.16) விதைத்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு நவ.16-ம் தேதி சுழற்றியடித்த கஜா புயலுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. எனினும், பனைமரங்கள் அப்படியே நின்றன. இதையடுத்து, பனையின் மகத்துவத்தை அறிந்த கொத்தமங்கலம் பகுதி இளைஞர்கள் 'பனைமரக் காதலர்கள்' எனும் அமைப்பைத் தொடங்கினர்.
இந்த அமைப்பில் உள்ள 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கொத்தமங்கலத்தில் உள்ள நீர்நிலைகளின் கரையோரங்களிலும் அவ்வப்போது பனை விதைகளை விதைத்து வருகின்றனர். இந்நிலையில், கஜா புயலடித்த 2-ம் ஆண்டை நினைவுகூரும் விதமாக கொத்தமங்கலம் பெரியகுளம் பகுதியில் இன்று மாலை 1,000 பனை விதைகள் விதைக்கப்பட்டன. தொடர்ந்து, ஏராளமான மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இதுகுறித்து அமைப்பின் நிர்வாகி க.பிரபாகரன் கூறியபோது, “கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 10,000 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஏராளமான விதைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. பனைமரங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT