Last Updated : 16 Nov, 2020 08:09 PM

 

Published : 16 Nov 2020 08:09 PM
Last Updated : 16 Nov 2020 08:09 PM

பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழப்பு: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள். 

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், மாடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஜீவா (27). இவரது மனைவி நந்தினி (22). இவர் சென்னை அப்பல்லோ மருந்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். கரோனா ஊரடங்கு காரணமாக நந்தினி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார்.

இந்நிலையில், கர்ப்பமாக இருந்த நந்தினிக்குக் கடந்த 14-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அருகேயுள்ள கதிரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இரவு முழுவதும் தங்கியிருந்தார். இதையடுத்து, 15-ம் தேதி காலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக நந்தினி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இன்றிரவுக்குள் குழந்தை பிறந்து விடும் எனக்கூறி அவரை பிரசவ வார்டில் அனுமதித்தனர். இந்நிலையில், ஜீவாவை அழைத்த மருத்துவர்கள் நந்தினிக்கு அறுவை சிகிச்சை செய்தால்தான் குழந்தை பிறக்கும் எனக் கூறியதாகத் தெரிகிறது. அதன்படி 15-ம் தேதி இரவு நந்தினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பெண் குழந்தை பிறந்தது.

இதைத் தொடர்ந்து, தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினாலும், 2 பேரும் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், நள்ளிரவில் நந்தினியின் உடல்நிலை மோசடைந்ததாகவும், மூச்சுத்திணறல் காரணமாக அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், காய்ச்சல் இருப்பதால் உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஜீவாவிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, நந்தினியைத் தனி ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு ஜீவா மற்றும் உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த வேலூர் மருத்துவர்கள், நந்தினி உயிரிழந்து 4 மணி நேரம் ஆகிறது எனக் கூறினர். இதைக் கேட்டதும், அனைவரும் கதறி அழுதனர்.

இதையடுத்து, நந்தினியின் உடல் அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த ஜீவா மற்றும் உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை இன்று (நவ.16) காலை முற்றுகையிட்டனர். அப்போது, நந்தினிக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர்களின் அலட்சியப் போக்கினால் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்து விட்டதாகவும், இதற்குக் காரணமானவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறியும் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால், அங்கு சலசலசப்பு ஏற்பட்டது.

இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், நகரக் காவல் ஆய்வாளர் பேபி தலைமையிலான காவல்துறையினர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இது தொடர்பாக புகார் மனு எழுதிக் கொடுங்கள்; உரிய விசாரணை நடத்தப்படும் எனக் காவல்துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்துத் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவர் திலீபன் 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் கூறும்போது, ''பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நந்தினி காய்ச்சலுடன் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளனர். இங்கு கைதேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பக் கருவிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளன.

ஆகவே, நந்தினியின் உறவினர்கள் கூறுவதைப்போல மருத்துவர்களின் அலட்சியப் போக்கு என்பதை ஏற்க முடியாது. மேலும், நந்தினி மூச்சுத் திணறல் காரணமாகவும், அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதாலும் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கை காட்டுகிறது.

இருப்பினும், நந்தினிக்கு அறுவை சிகிச்சை செய்தபோது பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் என அனைவரிடமும் துறை ரீதியான விசாரணை நாளை மேற்கொள்ளப்படும். அதன் அறிக்கை சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகே முடிவு தெரிவிக்கப்படும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x