Published : 16 Nov 2020 01:59 PM
Last Updated : 16 Nov 2020 01:59 PM
எல்லா மாநிலங்களிலும் பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய ஆதரவு அலை வீசி வரும் நிலையில், அந்த அலை புதுச்சேரியிலும் வீசி தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று புதுச்சேரி மாநில பாஜக தலைவரும், நியமன எம்எல்ஏவுமான சாமிநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (நவ.16) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, புதுச்சேரி மாநிலத்துக்கென்று தனியாக, புதிய பொறுப்பாளராக கர்நாடகாவைச் சேர்ந்த துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நிர்மல் குமார் சுரானாவை நியமித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் அனைத்து மாநில இடைத்தேர்தலிலும் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள். மெகா கூட்டணி மட்கிப் போன கூட்டணியாக மாறி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. எல்லா மாநிலங்களிலும் பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய ஆதரவு அலை வீசி வருகிறது. அந்த அலை வருகிற தேர்தலில் புதுச்சேரியிலும் வீசி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தேசிய கல்விக் கொள்கை அனைத்து மாநிலங்களிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. ஆனால், தமிழகம், புதுச்சேரியில் பிரதமர் எதைச் சொன்னாலும் புரிந்துகொள்ளாமல் திமுகவும், காங்கிரஸும் எதிர்த்து வருகின்றன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை. பிரதமர் மோடியை எதிர்ப்பதால் கல்வியையும் எதிர்க்கிறார்.
ஆட்சியையும், கூட்டணியையும் தக்கவைப்பதற்காகப் புதுச்சேரி முதல்வரும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகிறார். இதனால் திமுகவின் அனைத்துக் கொள்கைகளையும் பின்பற்றும் நபராக முதல்வர் நாராயணசாமி உள்ளார். புதுச்சேரியில் தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக முதல்வர் அமல்படுத்த வேண்டும். இதன்மூலம் ஏழை மக்கள் பயன்பெறுவார்கள்.
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்கள் தமிழுக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் விரோதிகள் ஆவர். எனவே, தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், நாராயணசாமி தலைமையிலான அரசைக் கண்டித்தும் வரும் 18-ம் தேதி பாஜக ஓபிசி அணித் தலைவர் சிவக்குமார் தலைமையில் சுதேசி மில் அருகில் இருந்து பேரணியாகச் சென்று கல்வித் துறையை முற்றுகையிட உள்ளோம்.
அடுத்த மாதம் ஜே.பி.நட்டா புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கிளைத் தலைவர்களிடமும் காணொலிக் காட்சி மூலம் பேச உள்ளார். பாஜக கட்சி பூத் வாரியாகத் தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது. தகுதியான வேட்பாளர்கள் களப்பணியில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.''
இவ்வாறு சாமிநாதன் தெரிவித்தார்.
பேட்டியின்போது பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT