Published : 16 Nov 2020 01:19 PM
Last Updated : 16 Nov 2020 01:19 PM
கோவை அரசு மருத்துவமனையில் மாவட்டத் தொடக்கநிலை இடையீட்டுச் சேவை மையம் (டிஇஐசி) செயல்பட்டு வருகிறது. இங்கு 18 வயது வரையுள்ள குழந்தைகளின் பல்வேறு பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான சிகிச்சைக்கு வழிவகை செய்து வருகின்றனர். அந்த வகையில் உதடு மற்றும் அன்னப்பிளவுடன் பிறக்கும் குழந்தைகளுக்குத் தொடக்க நிலையிலேயே அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து வருகின்றனர்.
இது தொடர்பாக டிஇஐசி மையத்தின் குழந்தைகள் நல மருத்துவர் முகமது அன்சர் அலி, குழந்தைகள் பல் மருத்துவர் சரண்யா ஆகியோர் கூறியதாவது:
''பிறக்கும் 1,000 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு உதடு, அன்னப்பிளவு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாக ஃபோலிக் அமிலம், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் இந்தப் பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். தாடைப் பிளவு இருந்தால் குழந்தையால் தாயிடமிருந்து பால் பருக இயலாது. இதனால், குழந்தையின் எடை குறையும். டியூப் வழியாக பாலை அளிக்க வேண்டியிருக்கும்.
எனவே, உதடு மற்றும் அன்னம் ஆகியவற்றில் பிளவுடன் குழந்தைகள் பிறந்தால் எங்களுக்குப் பரிந்துரை செய்கின்றனர். அதன்பிறகு, டியூபை எடுத்துவிட்டு வாய் வழியாகப் பால் பருக ஏதுவாகக் குழந்தையின் தாடைக்கு ஏற்ப அளவு எடுத்து செயற்கை அன்னத்தட்டு பொருத்துகிறோம். இதன் மூலம் மற்ற குழந்தைகளைப்போல ஓரளவு இயல்பாகப் பால் பருக முடியும். குழந்தையின் எடையும் அதிகரிக்கும். குழந்தைக்குத் தாய்ப்பாலை அளிக்க முடியாவிட்டால் தாய்க்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. செயற்கை அன்னத்தட்டு பொருத்துவதால் அந்தப் பிரச்சினையும் சரிசெய்யப்படும்.
தயக்கமின்றி அணுக வேண்டும்
பிறந்த குழந்தைக்கு உதடு, அன்னப்பிளவு பிரச்சினை இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். சில பெற்றோர் குழந்தையின் பிரச்சினை சரியாகாது என்று கைவிட்டு விடுகின்றனர். சிலர் தெய்வக் குற்றம் என்று கருதி மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். ஆனால், இதைச் சரிசெய்ய முடியும். இவ்வாறான பிறவிக் குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு 3 மாதங்களுக்குள் உதட்டு அறுவை சிகிச்சையும், 10 மாதங்களுக்குள் தாடை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும். இதுவரை 77 குழந்தைகளுக்கு குழந்தை நல அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறைகளுடன் இணைந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, குழந்தைகளுக்கு பேச்சுப் பயிற்சியும், பெற்றோருக்கு உளவியல் ஆலோசனையும் அளிக்கப்படுகிறது. இதுதவிர, நாக்கு துருத்தும் பழக்கம், விபத்தினால் முகத்தாடை, பற்களில் ஏற்படும் காயங்கள் உள்ளிட்டவற்றுக்கும் சிகிச்சை அளித்து வருகிறோம். இந்தச் சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவமனையின் டீன் டாக்டர் பி.காளிதாஸ், குழந்தைகள் துறைத் தலைவர் பூமா, டிஇஐசி மைத்தின் மருத்துவ அதிகாரி டாக்டர் ரவிசங்கர் ஆகியோர் உறுதுணையாக இருந்து வருகின்றனர்''.
இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT