Published : 03 Oct 2015 08:19 AM
Last Updated : 03 Oct 2015 08:19 AM
திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்து இதுவரை 26 மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரிடம் நேரடியாக மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
2016 சட்டமன்றத் தேதலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக-வில் ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலுவை ஒருங்கிணைப்பாளராக கொண்ட இந்தக் குழுவில் மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி, துணைப் பொதுச் செயலாளர்கள் சுப்புலெட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ, பேராசிரியர் ராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்து இக்குழுவினர் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து மனுக்களை பெற்று வருகின்றனர். இதுவரை 26 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், அமைப்புகள், மற்றும் சங்கங்களிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அக்டோபர் 3, 4 தேதிகளில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களிலும், இறுதியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மனுக்கள் பெறப்படுகின்றன.
இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அங்கத்தினர்கள் கூறியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகபட்சமாக சுமார் 250 மனுக்கள் வரை பெறப்பட்டுள்ளன. விவசாயிகள் தரப்பிலிருந்து ஏராளமான மனுக்கள் வந்துள்ளன. குறிப்பாக டெல்டா விவசாயிகள் காவிரி ஆற்றில் தடுப்பு அணைகளைக் கட்ட வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
எங்களிடம் வந்துள்ள மனுக்களில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் தர இடமிருக்காது. எனினும், அறிக்கையில் சேர்க்கப்பட்டது போக எஞ்சிய பிரச்சினைகளை கவனமாக குறிப்பெடுத்து தலைமையிடம் அளிக்க உள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் மாவட்ட வாரியாக அந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்து தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல், திமுக பொருளாளர் ஸ்டாலினும் தொகுதிவாரியாக மக்களைச் சந்தித்து வருகிறார். அவரது பயணத்திலும் ஏராளமான மனுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவைகளும் தனியாக தொகுக்கப்பட்டு வருகின்றன. எங்களைவிட அவர் இன்னும் மக்களை நெருக்கமாக சந்தித்து வருவதால் அவருக்கு வந்து சேரும் கோரிக்கை மனுக்களுக்கு தேர்தல் அறிக்கையில் கூடுதல் முக்கியத்துவம் தரப்படும். தேர்தலுக்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதால் அவசரம் காட்டாமல் தேர்தல் அறிக்கை பணிகளைச் செய்துவருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT