Published : 16 Nov 2020 03:12 AM
Last Updated : 16 Nov 2020 03:12 AM
ஆரணியில் நேற்று காலை காஸ் சிலிண்டர் வெடித்து 2 வீடுகள் இடிந்து விழுந்ததில் தாய், மகன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் புதுக்காமூர் பகுதியில் வசித்தவர் தண்டபாணி. இவரது மறைவுக்கு பிறகு, அவரது மனைவி பூ வியாபாரி முத்தாபாய்(55) மற்றும் வளர்ப்பு மகள் மீனா(18) ஆகியோர் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் பயன்படுத்தப்பட்ட காஸ் சிலிண்டரில் சில நாட்களாக கசிவு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை முத்தாபாய் சமையல் அறையின் மின் விளக்கை எரிய வைக்க முயன்றபோது, அறை முழுவதும் கசிந்திருந்த காஸில் தீப்பற்றியதால், சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், முத்தாபாய் வீடு மற்றும் பக்கத்து வீடு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் முத்தாபாய், அவரது மகள் மீனா, இவர்களது வீட்டில் குடியிருந்த முடித்திருத்தும் தொழிலாளி ஜானகிராமன்(40), அவரது மனைவி காமாட்சி(38), இவர்களது மகன்கள் சுரேஷ்(15), ஹேமநாதன்(10) மற்றும் பக்கத்து வீட்டில் வசித்த சந்திரா அம்மாள்(59) ஆகிய 7 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த ஆரணி தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் உடனடியாக விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர், 7 பேரும் மீட்கப்பட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி காமாட்சி, அவரது மகன் ஹேமநாதன் மற்றும் சந்திரா அம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 4 பேரும், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து ஆரணி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட திமுக பொறுப்பாளர் தரணிவேந்தன், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் மற்றும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் இரங்கல்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 நிவாரணம் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT