Last Updated : 16 Nov, 2020 03:12 AM

2  

Published : 16 Nov 2020 03:12 AM
Last Updated : 16 Nov 2020 03:12 AM

ஐடிஐ படித்தவர்களின் தேவை தனியார் நிறுவனங்களில் அதிகரிப்பு; அரசு ஐடிஐ மாணவர்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மண்டல இணை இயக்குநர் தகவல்

கோவை

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் வி.விஷ்ணு, கடந்த 2019 ஜூன் மாதம் தனியார் வேலைவாய்ப்பு இணையம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினர். வேலை தேடும் இளைஞர்கள், ஆட்கள் தேவைப்படும் நிறுவனத்தினர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். இதில், தங்களுக்கு தேவைப்படும் இளைஞர்களை, தகுதிகளின் அடிப்படையில் நிறுவனங்கள் தேர்வு செய்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்களில் ஐடிஐ படித்தவர்களின் தேவை அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் 160 நிறுவனங்களில் 3,172 வேலைவாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு ஐடிஐ-களில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர்களை, மேற்குறிப்பிட்ட பணியிடங்களில் பணியமர்த்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

160 நிறுவனங்கள் பதிவு

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கோவை மண்டல இணை இயக்குநர் ஆ.லதா கூறியதாவது:

கோவை மண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் 16 அரசு ஐடிஐ-கள் உள்ளன. இதில் ஆண்கள், பெண்கள், பழங்குடியினர் ஐடிஐ-களும் உள்ளன. இவற்றில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் தனியார் வேலைவாய்ப்பு இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக, கோவை மண்டலத்திலுள்ள 160 நிறுவனங்களும், 2600 மாணவர்களும் பதிவு செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த 9-ம் தேதி வளாக நேர்காணல் தொடங்கியது. பதிவு செய்துள்ள நிறுவனங்கள், அரசு ஐடிஐ-களுக்கு நேரில் சென்று, தேர்வு செய்து பணி நியமன உத்தரவுகளை வழங்கி வருகின்றன.

தேர்வு முடிந்த மறுநாளே பணியில்...

ஃபிட்டர், டர்னர், வெல்டர், எலெக்ட்ரீசியன், ஒயர்மேன், பிளம்பர், கணினி இயக்குநர், மெக்கானிக், மெஷினிஸ்ட் உள்ளிட்ட பணிகளுக்கு ஐடிஐ மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரூ.9 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இறுதி ஆண்டு மாணவர்கள், தேர்வு முடிந்த மறுநாளே பணியில் சேர்ந்து கொள்ளலாம். இம்மாத இறுதியில் ஐடிஐ மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. வரும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மாணவர்கள் பணியில் இணைய வேண்டும் என்று நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. அரசு ஐடிஐ-களில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x