Published : 29 Oct 2015 03:12 PM
Last Updated : 29 Oct 2015 03:12 PM

சூரிய ஒளி மின்சக்தி கலன்களை பராமரிக்க சூர்யமித்ரா திட்டம் மூலம் பயிற்சி: 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

சூரிய ஒளி மின்சக்தி கலன்களை (சோலார் பேனல்) பராமரிக்க 7 லட்சம் பணியாளர்கள் தேவை என்பதால், அவர்களுக்கு பயிற்சி வழங்க சூர்யமித்ரா திட்டத்தை நவம்பர் 15 முதல் மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

மத்திய அரசு தேசிய சூரிய எரிசக்தி நிறுவனம் சார்பில், நாட்டில் சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் சூரிய ஒளி மின்சக்தி கலன்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் சூரிய ஒளி மூலம் மின்சக்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பணிபுரிய தேவைப்படும் ஆட்களை தயார் செய்ய சூர்யமித்ரா என்ற திட்டம் மூலம் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’ செய்தியாளரிடம் காந்திகிராம பல்கலைக்கழக கிராம எரிசக்தி மையப் பொறுப்பாளர் கிருபாகரன் கூறியதாவது: இந்தியாவில் 2022-ம் ஆண்டுக்குள் 1.75 லட்சம் மெகா வாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2022-ல் இலக்கை அடையும்போது இந்தியா முழுவதும் 7 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுவர். இவர்களை உருவாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, சூரிய மித்ரா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் இந்த திட்டத்தில், மூன்று மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின்போது உணவு, தங்கும் இடம் இலவசம். பயிற்சி அளிப்பதற்கான அங்கீகாரம் காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி முடிந்தவுடன் தனியார் மற்றும் அரசு அமைத்துள்ள சூரிய ஒளிகலன் மையத்தில் சேர்ந்து பணிபுரியலாம். தொடக்கத்திலேயே இவர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது. 2015-16 ஆண்டுக்குள் நாடு முழுவதும் 50 ஆயிரம் பேர் சூரிய ஒளிகலன்களைப் பராமரிக்க தேவைப்படுகின்றனர்.

இதற்கான பயிற்சி நவம்பர் 15-ல் தொடங்குகிறது. பயிற்சியில் சேர ஐ.டி.ஐ. அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். தற்போதே இந்தத் துறையில் தமிழகத்தில் மட்டும் 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x