Published : 15 Nov 2020 05:00 PM
Last Updated : 15 Nov 2020 05:00 PM

சட்டத்துக்கு மேலானவரா சூரப்பா? - தற்காலிக பணி நீக்கம் செய்க: முத்தரசன்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (நவ. 15) வெளியிட்ட அறிக்கை:

"அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. உயர்கல்வித் துறையின் விசாரணையில் ரூ.280 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் ஆசிரியர் நியமனத்தில் மட்டும் ரூ.80 கோடி கையூட்டு கைமாறியிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சூரப்பாவை துணைவேந்தர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என கல்வியாளர்களும், எதிர்க்கட்சிகளும், தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் ஆளும் தரப்பினர் மவுனம் காத்தும், அவரை ஆதரித்தும் வந்தனர்.

இப்போது, நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைத்து, சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் என அறிவித்தப்பட்டுள்ளது. இது தாமதமான முடிவு என்றாலும் விசாரணை நேர்மையாக நடப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.

குற்றச்சாட்டுக்கு ஆளான சூரப்பா நேர்மையிருந்தால் துணைவேந்தர் பொறுப்பிலிருந்து விலகி விசாரணையை சந்திக்க வேண்டும். அவரிடம் அதனை எதிர்பார்க்க முடியாத நிலையில் அவரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும்.

சூரப்பாவை தற்காலிக பணிநீக்கம் செய்யாமல், அவர் துணைவேந்தர் என்ற நிலையிலிருந்தே விசாரணையை சந்திக்க அனுமதித்தால் அது கேலிக்கூத்தாகவும், நடந்து போன ஊழல்களை மூடிமறைக்கும் முயற்சியாகவே முடியும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

எனவே, நீதிபதி பி.கலையரசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையும், அதன் மீதான அரசின் நடவடிக்கையும் முடிவாகும் காலம் வரையிலும் சூரப்பாவை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசையும், ஆளுநரையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x