Published : 15 Nov 2020 01:32 PM
Last Updated : 15 Nov 2020 01:32 PM
ஆரணியில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ. 15) வெளியிட்ட அறிக்கை:
"திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் மற்றும் நகரத்தில் வசிக்கும் முத்தம்மாள் என்பவரின் வீட்டில் இன்று காலை எரிவாயு கசிவு ஏற்பட்டு, சிலிண்டர் வெடித்ததில், காமாட்சி, சிறுவன் ஹேமநாதன் மற்றும் சந்திரா அம்மாள் ஆகிய மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த விபத்தில் நான்கு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கண்ட துயர சம்பவத்தில் உயிரிழந்த காமாட்சி, சிறுவன் ஹேமநாதன் மற்றும் சந்திரா அம்மாள் ஆகிய மூன்று நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த செய்தி குறித்து அறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்து கொள்ளவும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
எனது உத்தரவின் பேரில், அமைச்சர் தலைமையில், மாவட்ட ஆட்சியர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த காமாட்சி, சிறுவன் ஹேமநாதன் மற்றும் சந்திரா அம்மாள் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
பொதுமக்கள் தங்களது வீடுகளில் எரிவாயு சிலிண்டரை உபயோகிக்கும் போது, கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என இத்தருணத்தில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT