Published : 13 Nov 2020 07:57 PM
Last Updated : 13 Nov 2020 07:57 PM

போலீஸ் அதிகாரிகள் பெயரில் போலி முகநூல் கணக்குத் தொடங்கி மோசடி: குற்றவாளிகள் 3 பேர் கைது

சென்னை

காவல் உயர் அதிகாரிகள் பெயரில் போலி முகநூல் கணக்கை உருவாக்கி அதன் மூலம் பண உதவி கேட்டு மோசடி செய்ததாகத் தேடப்பட்டு வந்த நபர்கள் 3 பேரை மத்திய குற்றப்பிரிவின் கணினி வழி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“தமிழகக் காவல்துறையினர் மற்றும் பிற மாநிலக் காவல்துறையினரின் பெயர்களில் போலியான முகநூல் கணக்கைச் சமூக வலைதளங்களில் தொடங்கி, அவர்களின் நண்பர்களிடம் உதவி கேட்டு மோசடி செய்யும் குற்றச்செயலில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்தது.

இது தொடர்பாக, மாதவரம் உதவி ஆணையர் அருள் சந்தோஷமுத்து கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவின் கணினிவழிக் குற்றப்பிரிவில் வழக்குப் பதியப்பட்டது. இதேபோன்று போலி முகநூலில் கணக்குத் தொடங்கப்பட்ட தமிழகக் காவல் அலுவலர்களின் விவரத்தினைச் சேகரித்துக் குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த மோசடிச் செயலில் ஈடுபட்ட முக்கியக் கும்பல் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் பஹரி தாலுக்காவிலிருந்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதே குற்றத்திற்காக முஸ்தகீன்கான், ஒரு இளஞ்சிறார் ஆகிய இரண்டு குற்றவாளிகளுக்கும் சென்னை வழக்கில் தொடர்பு உள்ளதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விசாரணை செய்யப்பட்டது.

குற்றவாளி முஸ்தகீன்கானை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கையில் தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இதேபோன்ற வழக்குகளில் தொடர்புள்ள தலைமறைவாக உள்ள மோசடிக் கும்பலின் தலைவனான ஷகீல்கான், அவருக்கு ஆதரவாகச் செயல்படும் ரவீந்தர்குமார் ஆகியோர் பற்றிய தகவல் கிடைக்கப் பெற்றது.

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழியின் மேற்பார்வையில். மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் நாகஜோதி வழிகாட்டுதலின்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் காவல் உதவி ஆணையர், கணினிவழிக் குற்றப்பிரிவு துரை, காவல் ஆய்வாளர் வினோத்குமார் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படையினர் கடந்த ஒருவாரமாக ராஜஸ்தான் மாநிலத்தில் முகாமிட்டுக் குற்றவாளிகளைத் தேடிவந்தனர்,

அங்கே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்த மோசடிக் கும்பலின் தலைவன் ஷகீல்கான், அவருக்கு உதவியாக இருந்த ரவீந்தர்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.

ஷகீல்கான் முகநூலில், காவல்துறை அதிகாரிகளின் புகைப்படத்தைப் பயன்படுத்தி போலியான முகநூல் கணக்கை அவர்கள் பெயரிலேயே உருவாக்கி அதன் மூலம் பண மோசடி செய்ய மூளையாகச் செயல்பட்டுள்ளார். மோசடியாகக் கிடைக்கும் பணத்தை ஏற்கெனவே போலியாக உருவாக்கி வைத்திருக்கும் கூகுள் பே, பேடிஎம் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி பின்னர் அதை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இ-மித்ரா முகவரான ரவீந்தர்குமார் என்பவரின் ஸ்வைப் மெஷின் உதவியோடு எடுத்து தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்''.

இவ்வாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x