Published : 13 Nov 2020 05:50 PM
Last Updated : 13 Nov 2020 05:50 PM
பிரிட்ஜ், வாஷிங் மெஷின் தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுகவினர் உறுப்பினர்களைச் சேர்த்து வருகின்றனர் எனத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் விமர்சித்துள்ளார்.
திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குரிசிலாப்பட்டு, ஆண்டியப்பனூர், இருணாபட்டு, பெருமாப்பட்டு, பள்ளவள்ளி ஆகிய 5 ஊராட்சிகளில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி இன்று (நவ.13) நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் திருப்பத்தூர் ஒன்றியச் செயலாளர் சிவாஜி (வடக்கு), தலைமை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் சின்னராசு முன்னிலை வகித்தார். முன்னதாக, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநரணிச் செயலாளர் சரவணன் வரவேற்றார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பாசறையில் உறுப்பினர்களாகச் சேருவதற்கான விண்ணப்பங்களையும், தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாகச் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களையும் வழங்கிப் பேசியதாவது:
"இணையதளம் மூலம் திமுகவினர் அதிக உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டதாகப் பொய்யான பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர். வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் வீடு, வீடாகச் செல்லும் திமுகவினர், வாஷிங் மெஷின் உள்ளதா? பிரிட்ஜ் இருக்கிறதா? மிக்ஸி இல்லையா? எனக் கேட்டுக் கணக்கெடுக்கின்றனர்.
பெண்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப்பொருட்கள் இல்லை என்றால் அவர்களின் பெயர்களை எழுதிக்கொண்டு, அடுத்து திமுகதான் ஆட்சிக்கு வரும், வந்த உடன், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வழங்குவோம் என ஆசை வார்த்தைகளைக் கூறி அவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து வருகின்றனர்.
பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஓட்டு வாங்குவதில் திமுகவினரை மிஞ்ச தமிழகத்தில் ஆளே கிடையாது. கடந்த தேர்தல்களில், திமுக வெற்றி பெற்றால் 2 ஏக்கர் நிலம் வழங்குவதாகக் கூறினார்கள். 2 சென்ட் நிலம் கூட ஒருவருக்கும் கொடுக்கவில்லை. திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம், குற்றச்சம்பவங்கள்தான் அதிக அளவில் நடந்துள்ளன. மீண்டும் அதேபோலத்தான் நடக்கும்.
அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் செய்த சாதனைகளை மக்களிடம் சொல்லி வரும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். பொய்யான வாக்குறுதிகளை அதிமுக எப்போதும் அளித்தது இல்லை. கடந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம்.
தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் ஏராளமான வசதிகளை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. இதைத் தொழிலாளர்கள் மறக்கமாட்டார்கள்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு மீண்டும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. 2021-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு திமுக காணாமல் போய்விடும்".
இவ்வாறுஅமைச்சர் நிலோபர் கபீல் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT