Published : 13 Nov 2020 03:32 PM
Last Updated : 13 Nov 2020 03:32 PM

ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல; விசாரணைக் குழுவைச் சந்திக்கத் தயார்: துணைவேந்தர் சூரப்பா பேட்டி

சென்னை

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார், முறைகேடான பணி நியமனங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவைத் தமிழக அரசு அமைத்து அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்துத் தனக்குக் கவலை இல்லை என்றும், விசாரணை கமிட்டி அழைத்தால் எனது விளக்கத்தை அளிக்கத் தயாராக உள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிக்கு அளித்த பேட்டி:

“என் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல. விசாரணை கமிஷன் அமைத்தது அதிர்ச்சியளிக்கிறது. நான் ஒரு பைசா கூட லஞ்சம் பெற்றதில்லை. என் மீது புகார் மனு அளித்தவர்கள் யார் என்பது எனக்குத் தெரியாது. நான் அப்பழுக்கற்றவன். இதற்கு முன்னதாகப் பல்வேறு முன்னணிக் கல்வி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளேன்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளேன். பெரிய கல்வி நிறுவனங்களில் கல்வி ஆலோசகராகவும் இருந்துள்ளேன். என் மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டதில்லை.

எனவே, இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து எனக்குக் கவலை இல்லை. என் மீது விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிட்டி குறித்தும் எனக்குக் கவலை இல்லை.

பல்கலைக்கழகத்தில் சில பணி நியமனங்கள் துணைவேந்தரின் அதிகாரத்திற்கு உட்பட்டே செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டுதான் என் மகளை நான் பணி நியமனம் செய்தேன். அதில் எந்தவித விதிமீறலையும் நான் செய்யவில்லை.

இது சம்பந்தமாக நான் யாரையும் சந்திக்கப் போவதில்லை. இது தொடர்பாக நான் தமிழக ஆளுநரைச் சந்திக்கவில்லை. விசாரணை கமிட்டி அழைத்தால் எனது விளக்கத்தை அளிக்கத் தயாராக உள்ளேன். என் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்”.

இவ்வாறு சூரப்பா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x