Published : 13 Nov 2020 01:55 PM
Last Updated : 13 Nov 2020 01:55 PM
புதுச்சேரி அதிமுக முதல் முறையாக இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாநிலச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பல்வேறு கட்சிகள் மும்முரமாகப் பணிகளைத் தொடங்கியுள்ள சூழலில், ஓராண்டாக புதுச்சேரி அதிமுகவில் காலியாக உள்ள மாநிலச் செயலாளர் பதவி உட்பட முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் தொண்டர்கள் தவிப்பில் இருந்தனர்.
இதர கட்சிகள் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கியிருந்த சூழலில் பலரும் கட்சித் தலைமையிடம் இதை வலியுறுத்தத் தொடங்கினர்.
இந்நிலையில், புதுச்சேரி அதிமுக இரண்டாகப் பிரிக்கப்பட்டு செயலாளர்களாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், கிழக்கு மாநிலச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் அன்பழகன் எம்எல்ஏவும், மேற்கு மாநிலச் செயலாளராக ஓபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று (நவ. 13) கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், "கிழக்கு மாநிலத்தின் கீழ் உப்பளம், காமராஜர் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், திருபுவனை, பாகூர், ஏனாம் ஆகிய 13 தொகுதிகளும், மேற்கு மாநிலத்தின் கீழ் நெல்லித்தோப்பு, மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், ஊசுடு, மங்கலம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி, உருளையன்பேட்டை, மாஹே ஆகிய 12 தொகுதிகளும் உள்ளன.
கிழக்கு மாநிலச் செயலாளராக எம்எல்ஏ அன்பழகனும், மேற்கு மாநிலச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகரும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே 5 தொகுதிகளைக் கொண்ட காரைக்காலுக்கு தனி மாவட்டச் செயலாளர் உள்ள நிலையில், மீதமுள்ள 25 தொகுதிகள் இருவருக்கும் பிரித்து அளிக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே திமுகவும் புதுச்சேரி மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அமைப்பாளர்களை நியமித்திருந்தது. அதைத் தொடர்ந்து, அதிமுகவும் தற்போது பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT