Published : 13 Nov 2020 01:01 PM
Last Updated : 13 Nov 2020 01:01 PM
ஆலங்குளத்தை மையமாக வைத்து கல்வி மாவட்டம் அமைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமியிடம் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமியிடம் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் முருகன், மாவட்டச் செயலாளர் பாபு செல்வன், பொருளாளர் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் விஜயன், விஷ்ணுசங்கர், தங்கராஜ்,
சிவபார்வதி நாதன், சபரி, ஜெயக்குமார் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் வழித்தட அலுவலராகவும், பறக்கும்படை உறுப்பினராகவும் பணிபுரிந்த முதுநிலை ஆசிரியர்களுக்கு இதுவரை உழைப்பூதியம் வழங்கப்படவில்லை. எனவே, உழைப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தை தென்காசி கல்வி மாவட்டம், சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் தலா ஓர் இடத்தில் அமைக்க வேண்டும்.
ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அலுவலக ரீதியாக சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு சென்று வர சிரமப்படுகின்றனர். எனவே, ஆலங்குளத்தை மையமாக வைத்து கல்வி மாவட்டம் அமைக்க வேண்டும்.
உயர்க் கல்வி பயின்ற முதுநிலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை ஒப்புதல் வழங்க மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT