Published : 13 Nov 2020 12:36 PM
Last Updated : 13 Nov 2020 12:36 PM

நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யமாட்டார் என்பதால் முதல்வர் பழனிசாமியைப் புறக்கணிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்: ஸ்டாலின் பேச்சு

கட்சியில் இணைந்தவர்களிடம் காணொலி வாயிலாக பேசும் மு.க.ஸ்டாலின்.

சென்னை

ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், பேசக் கூடாதவற்றையெல்லாம் முதல்வர் பழனிசாமி பேசுகிறார் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ. 13) அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகி 1,134 பேர் திமுகவில் இணைந்தனர். காணொலி வழியாக நடைபெற்ற இந்நிகழ்வில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதிதாக திமுகவில் இணைந்தவர்களை வரவேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

"உலகத்தில் எந்த இயக்கத்திலும் இல்லாத ஒரு உணர்வு திமுகவில் மட்டும்தான் உண்டு. அதுதான் குடும்பப் பாச உணர்வு. நான் தலைவன், நீங்கள் தொண்டர்கள் என்று இல்லாமல், அண்ணன் - தம்பி பாசத்தோடு, சகோதரப் பாசத்தோடு பழகும் இயக்கம் திமுக.

'நம் அனைவரையும் பெற்றெடுக்க ஒரு தாயின் வயிறு தாங்காது என்பதால் தனித்தனி தாய்களின் வயிற்றில் பிறந்தவர் நாம்' என்பார் அண்ணா. அனைவரையும் 'தம்பி' என்று அழைத்த தமிழ்நாட்டு அண்ணன் அவர். அனைவரையும் உடன்பிறப்புகளே என்று அழைத்த மூத்த உடன்பிறப்புதான் கருணாநிதி. அந்த வரிசையில் 'உங்களில் ஒருவன்' என்று நான் என்னை அழைத்துக் கொள்கிறேன். அத்தகைய உங்களில் ஒருவனான நான், எங்களில் ஒருவனாக இணைந்து கொள்ளும் உங்கள் அனைவரையும் சகோதரப் பாசத்துடன் வரவேற்கிறேன்.

திமுக என்ற கருப்பு சிவப்புக் கடலில் உங்களை நீங்கள் இணைத்துக் கொண்டுள்ளீர்கள்; சங்கமித்துள்ளீர்கள். இனி நீங்கள் தனித்தனி ஆள் அல்ல. ஒரு இயக்கமாக ஆகிவிட்டீர்கள்.

இரண்டே மாதத்தில் ஒரு இயக்கத்தில் 20 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள் என்றால் அது உலகத்திலேயே நமது இயக்கத்தில் மட்டுமாகத் தான் இருக்கும்.

நமது லட்சியத்தைப் பார்த்து லட்ச லட்சமாக இணைகிறார்கள். அப்படி இணைந்த லட்சியவாதக் கூட்டத்தில் நீங்களும் அங்கம் என்பதை அறியும்போது மகிழ்ச்சி அடைகிறேன். இப்படிக் கூட்டம் கூட்டமாக திமுகவை நோக்கிப் புதியவர்கள் ஈர்க்கப்படுவதைப் பார்த்து முதல்வர் பொறாமைப்படுகிறார். எந்தச் சூழலிலும் திமுக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறதே என்று வேதனைப்படுகிறார். இந்த கரோனா காலத்திலும் மக்களுக்குச் சேவை செய்து நல்ல பெயர் வாங்கி விட்டார்களே என்று கோபப்படுகிறார்.

இந்தப் பொறாமையும், வேதனையும் கோபமும் அவருக்கு என்ன பேசுகிறோம் என்று தெரியாத அளவுக்கு அவரை ஆத்திரத்தில் உளற வைக்கிறது. என்னென்னவோ பேசுகிறார். ஒரு முதல்வர் என்ன மாதிரி பேசக் கூடாதோ அந்த மாதிரி எல்லாம் பேசுகிறார்.

என்னை ஆண்டவன் கவனித்துக் கொள்வார் என்று தூத்துக்குடியில் போய் சொல்லி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியைப் போல பாவங்களை மட்டுமே செய்து கொண்டிருப்பவனல்ல நான். அதனால் அவர் தான் பயப்பட வேண்டுமே தவிர நான் பயப்படத் தேவையில்லை.

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தல்தான் அவரது தொழில். தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எத்தகைய துரோகத்தையும் யாருக்கும் செய்யத் தயங்காதவர் பழனிசாமி.

'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு' - என்கிறார் திருவள்ளுவர்.

செய்ந்நன்றி கொன்ற ஒரு பாவம் போதும் பழனிசாமிக்கு, வாழ்நாளில் பெரிய தண்டனை கிடைக்க.

தனக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போலவும், தான் வைத்ததுதான் சட்டம் என்பது போலவும் நடந்து கொள்கிறார். தன்னை ஏதோ ஜெயலலிதா போலவே நினைத்துக் கொள்கிறார்.

ஜெயலலிதா சாலையில் பயணம் செய்யும் போதுகூட கடைகளை மூடச் சொல்வது இல்லை. ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னால் தூத்துக்குடி சென்ற பழனிசாமி பயணம் செய்யும் பாதையில் கட்டாயப்படுத்தி கடையை மூட வைத்துள்ளார்கள். சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள கடைகள் மூன்று மணி நேரம் மூடப்பட்டதற்கு என்ன காரணம்?

தன்னை ஏதோ பெரிய அதிகாரம் பொருந்தியவராக நினைத்துக் கொள்கிறாரா? அல்லது யாராவது மக்கள் வந்து கருப்புக் கொடி காட்டிவிடக் கூடாது என்று பயந்தாரா என்னவோ தெரியவில்லை.

'கோ பேக் ஈபிஎஸ்' என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியதால் பயந்து போய் இப்படிக் கடையை மூடச் சொன்னாரா என்று சந்தேகமாக உள்ளது. அதாவது, மக்களைச் சந்திக்கப் பயப்படும் முதல்வரைப் பார்க்கிறோம்.

இவர் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யமாட்டார் என்பதால் அவரை மக்கள் புறக்கணிக்கத் தயாராகிவிட்டார்கள். அதனுடைய வெளிப்பாடுதான் இணையதளங்கள் மூலமாக இருபது லட்சம் பேர் இணைவதும்; இன்றைக்கு கள்ளக்குறிச்சியில் நீங்கள் இணைவதும்!

மிக மிக முக்கியமான காலகட்டத்தில் நீங்கள் திமுகவினுள் வந்து சேர்ந்துள்ளீர்கள்.

தேர்தல் எனும் பெரும் கடமை உங்களுக்காகக் காத்திருக்கிறது. அதில் வெற்றி பெற வேண்டிய பொறுப்பு உங்கள் தோள்களில் இருக்கிறது.

கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் காத்து வெற்றிக் கோட்டையைக் கைப்பற்றுவோம்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x