Published : 13 Nov 2020 10:57 AM
Last Updated : 13 Nov 2020 10:57 AM
நாளை (நவ. 14) தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆளுநர், தமிழக முதல்வர் ஆகிய இருவரும் தமிழக மக்களுக்குத் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநர்
தீபாவளித் திருநாளானது அவநம்பிக்கையை வெல்லும் நம்பிக்கையாகவும், தீமையை வெல்லும் நன்மையாகவும், இருளை வெல்லும் ஒளியாகவும் திகழ்கிறது. மகிழ்ச்சியான இத்தருணத்தில், தமிழ்நாட்டு மக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளையும், நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் கொண்டாடப்படும் மிகச் சிறப்பான பண்டிகைகளில் தீபாவளித் திருநாளும் ஒன்றாகும். இத்திருநாள் நாடெங்கிலும் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நன்மையின் குன்றாத வலிமையையும், தீமையை வெல்லும் அதன் வல்லமையையும் கொண்டாடும் விழாவாக தீப ஒளித் திருவிழாவாக தீபாவளித் திருநாள் திகழ்கிறது.
வாய்மையும் அறமுமே இறுதியில் வெல்லும் என்பதை இத்திருநாள் எடுத்து இயம்புகிறது. இருளிலிருந்து ஒளியை நோக்கிச் செல்லவும், அறியாமையிலிருந்து மேலான அறிவை எய்தவும், மனச்சோர்விலிருந்து பேரின்பத்தைப் பெறவும் இந்நன்னாள் நமக்கு ஊக்கமளிக்கிறது.
இத்திருநாள், நம்முடைய மாநிலத்திற்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சியையும் வளத்தையும் நல்லிணக்கத்தையும் அமைதியையும் நல்ல ஆரோக்கியத்தையும் வாரி வழங்கட்டும். நன்மை மற்றும் ஒளியின் வலிமை என்றென்றும் தழைத்தோங்கட்டும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தீபத் திருநாளாம் தீபாவளிப் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், எனது உளம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னை மகாலட்சுமி துணையுடன் நரகாசுரன் எனும் கொடிய அரக்கனைத் திருமால் அழித்த தினமே தீபாவளிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இத்தீபத் திருநாள், அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகவும், காரிருள் மறைந்து, அறிவொளி பிறந்து, இன்பமும், இனிமையும் நிறைந்த நன்னாளாகவும் விளங்குகிறது.
இத்தீபாவளித் திருநாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகி, நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT