Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

சென்னை, புறநகரில் விடிய விடிய மழை: இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என எச்சரிக்கை

சென்னை

சென்னையில் நேற்று அதிகாலையில் இருந்து விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஓரிரு நாட்கள் சென்னையில் மழை பெய்து வந்தது. பின்னர் தென் தமிழக பகுதியில் வலுப்பெற்று இருந்தது. நவம்பர் முதல் வாரத்தில் சென்னையில் மழை குறைந்திருந்தது. தற்போது வங்கக் கடலில்குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. அதன் காரணமாக கடந்த 2 நாட்களாக வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இங்கு நேற்று அதிகாலை முதல் விடிய விடிய, விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வந்தது.இதன் காரணமாக சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை போன்றவற்றில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகனஓட்டிகள் வாகனங்களை குறைவான வேகத்தில் இயக்கினர். தேங்கிய நீரில் பள்ளங்களை அறிய முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். மழைநீர் தேங்கிய பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

நேற்று காலை 6 மணி வரை நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 செமீ, பெரம்பூரில் 2 செமீ, ஆலந்தூர், டிஜிபிஅலுவலகம், மாம்பலம், நுங்கம்பாக்கம், அயனாவரம் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழைபதிவாகியுள்ளது. சென்னையில் இன்றும் மழை நீடிக்கும் என்றும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x