Published : 13 Nov 2020 03:17 AM
Last Updated : 13 Nov 2020 03:17 AM
தூத்துக்குடி மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ச.குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கும்போது பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும். ஒரு வாளியில் தண்ணீரை எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் அருகில் வைத்திக்கவேண்டும்.
வெடிக்காத பட்டாசுகள் மீதும், உபயோகப்படுத்தப்பட்ட கம்பி மத்தாப்புகள் மீதும் தண்ணீர் தெளிக்கப்படவேண்டும். நீண்ட பத்திக்குச்சியை பயன்படுத்தி நின்ற நிலையிலேயே, திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிக்கச்செய்ய வேண்டும்.
சிறுவர்கள் பட்டாசுகளை வெடிக்கும்போது பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் தங்களது கண்காணிப்பிலேயே வெடிக்கச் செய்யவேண்டும். பட்டாசுகளை சட்டை மற்றும் கால் சட்டை பைகளில் போடுவதற்கு அனுமதிக்க கூடாதுபட்டாசு வெடிக்கும்போது கண்டிப்பாக காலணிகளை அணிந்திருப்பதுடன், பட்டாசு வெடித்தபின் கைகளை நன்கு கழுவ வேண்டும். உடலோடு ஒட்டிய பருத்திஆடைகளை மட்டுமே அணிந்திட வேண்டும்.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அனுமதிக்கவேண்டாம். வெடிக்காத பட்டாசுகளை கையில்எடுக்கக்கூடாது. வீட்டுக்குள் மற்றும்வாகனம் நிறுத்தும் பகுதிகளில் ஒருபோதும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டாசுகளை குவித்து வைத்தோ அல்லது எல்லாவற்றையும் சேர்த்தோ வெடிக்கக்கூடாது.
பட்டாசுகளை கைகளில் பிடித்தவாரோ அல்லது தூக்கி வீசியோ, பாட்டில்கள், தேங்காய் சிரட்டை மற்றும் பிற உபகரணங்களில் வைத்தோ வெடிக்கக்கூடாது. காதுகளை பாதிக்கும் வகையில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்திடவேண்டும்.
பட்டாசுகள் வெடிக்கும்போது காயம் ஏற்பட்டால் அப்பகுதியை உடனடியாக குழாய் நீரில் படுமாறு காண்பிக்கவேண்டும். ஒருபோதும் தேய்த்து கழுவக்கூடாது. தீக்காயத்தின் மீது இங்க், மை போன்றவற்றை தடவக்கூடாது. காயத்தின் தன்மைக்கேற்ப 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் 101 என்ற எண்ணில் தீயணைப்பு வாகனங்களை தொடர்பு கொள்ளலாம்.
தீபாவளி அன்று ஏதேனும் விபத்துகள் ஏற்படும்பட்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் முக்கியமான 3 இடங்களில் தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைத்திட தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாவட்டம் முழுவதும் தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் 196 தீயணைப்பு வீரர்கள் சிறப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT