Published : 12 Nov 2020 04:45 PM
Last Updated : 12 Nov 2020 04:45 PM

அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்; மாநில அரசு நிர்வாகத்தில் பாஜக தலையிடுவதா?- முத்தரசன் கண்டனம்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

அருந்ததி ராயின் புத்தகத்தைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (நவ. 12) வெளியிட்ட அறிக்கை:

"மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தனது உறுப்புக் கல்லூரிகளில் பாடப்புத்தகமாக வைத்திருந்த அருந்ததி ராயின் 'தோழர்களுடன் ஒரு பயணம்' (Walking with the comrades) என்ற நூலைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியுள்ளது.

காரணம் கேட்டபோது ஏபிவிபி என்ற மாணவர் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்ததால் விலக்கிக் கொண்டுள்ளதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூறியுள்ளார்.

பாடத்திட்டத்தில் எந்த நூலை வைக்கலாம் என்று முடிவு எடுக்கும் அதிகாரம் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவிடமிருந்து, ஏபிவிபி எப்போது பறித்தது? வனவளம், கனிமவளம் மற்றும் அரிய தாதுப்பொருட்களின் முக்கியத்துவம், இயற்கை சூழலின் அவசியம் குறித்து வலியுறுத்தும் நூல் நக்சலைட்டுகளுக்குப் புகழாரம் சூட்டுவதாகக் கூறுவது கார்ப்பரேட் கொள்ளைக்கு ஆதரவான குரல் அல்லவா?

இவை குறித்து கற்றறிந்த கல்வியாளர்கள் பரிசீலிக்காமல், பாஜக ஆதரவு மாணவர் அமைப்பு மிரட்டியதும், மண்டியிட்டுப் பணிவது அப்பட்டமான அடிமைத்தனமாகும். அருந்ததி ராயின் நூலைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

அண்மைக் காலமாக பாஜக மாநில அரசு நிர்வாகத்திலும், அதிகாரத்திலும் நேரடியாக தலையிடுவது அதிகரித்து வருகின்றது. இதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு, மவுன சாட்சியாக இருந்து வருவது வேதனையளிக்கிறது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உடனடியாக அந்த நூலை பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை வேண்டும்".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x