Published : 12 Nov 2020 03:22 PM
Last Updated : 12 Nov 2020 03:22 PM
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் வைராலஜி ஆய்வகம், 5 லட்சம் கரோனா மாதிரிகளை ஆர்டிபிசிஆர் முறையில் பரிசோதனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
’கரோனா’ தொற்றைக் கண்டறிய ஆர்டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதனை முக்கியமானது. இந்த பரிசோதனையை அடிப்படையாகக் கொண்டே நோயாளிகளுக்கு கரோனா இருக்கிறதா? இல்லையா? என்பதைக் கண்டறிந்து மருத்துவ வல்லுநர்கள் சிகிச்சை மேற்கொள்வார்கள்.
தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வைரலஜி ஆய்வகத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை தொடங்கப்பட்டது.
தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து கரோனா அறிகுறி நோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
அதனால், நோயாளிகளுக்கு கரோனாவைக் கண்டறிய மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வைரலாஜி ஆய்வகம் இரவு, பகலாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
தற்போது இந்த ஆய்வகம் மாநிலத்திலே 5 லட்சம் கரோனா மாதிரிகளை ஆர்டிபிசிஆர் முறையில் பரிசோதனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கல்லூரி முதல்வர் சங்குமணி அனைத்து வைராலஜி ஆய்வகத்தினருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணி கூறியதாவது:
மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி வைராலஜி ஆய்வகங்களில் இதுவே அதிகம் ஆகும்.
இந்த சாதனைக்கு முக்கியக் காரணம் அர்ப்பணிப்புடன் கூடிய நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சி விஞ்ஞானிகள், முதுகலை மாணவர்கள், ஆய்வக நுட்பனர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் அடங்கிய குழுவானது மார்ச் 25 முதல் இன்றுவரை 24 மணி நேரமும் அயராது திறம்பட பணியாற்றி வருவதே ஆகும்.
இந்த ஆய்வகம், ஒரு நாளைக்கு 4800-க்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதிக்கும் திறன் கொண்டு விளங்குகின்றது. தற்போது இந்த ஆய்வகமானது கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மாதிரிகளையும் பரிசோதித்து வருகிறது.
மாநிலத்திலேயே முதன் முறையாக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி தான் கரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலமும், இணைய தளம் மூலமும் உடனுக்குடன் மக்களுக்கு வழங்கி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT