Published : 12 Nov 2020 01:28 PM
Last Updated : 12 Nov 2020 01:28 PM

மின்வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேலான பணியிடங்கள்; உடனடியாக நிரப்பிடுக: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை

மின்வாரியத்தில் பத்தாயிரம் கேங்மேன் பணியிடங்களையும், காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதர பணியிடங்களையும் வேலை வாய்ப்பின்றித் தவிக்கும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:

''தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணிகளில் காலியிடங்கள் அதிகம் உள்ளன. இதனால் குறைந்த அளவு ஊழியர்களை வைத்துக்கொண்டு நுகர்வோர்களுக்குத் திருப்தியான முறையில் சேவை செய்ய முடியவில்லை. இருக்கின்ற ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும் ஏற்பட்டது. எனவே, களப்பணியிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமெனக் கோரி மின்சார வாரியத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன.

இதன் விளைவாக மின்சார வாரியம் 10,000 கேங்மேன் காலிப் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்தது. அதற்காக 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உடற் தகுதித் தேர்வும் மற்றும் எழுத்துத்தேர்வும் நடத்தி, 15,000 பேர் தேர்ச்சி பெற்றதாக மே மாதம் அறிவித்தது. தேர்ச்சி வரிசைப் பட்டியலையும் வெளியிட்டது. அதன்படி கேங்மேன் பணியாளர்களைப் பணியமர்த்த மின்சார வாரியம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. தமிழக அரசின் இப்போக்கு ஏற்கக்கூடியதல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பீல்ட் அசிஸ்டென்ட், ஜூனியர் அசிஸ்டென்ட் என்ற ஆரம்பநிலைப் பணிகளில் சுமார் 52,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மின்வாரியத்தில் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருப்பதனால் மின் நுகர்வோர் சேவை செய்வதில் காலதாமதம் ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகள் ஏற்படுவதற்கும் அதிகமான வாய்ப்புகள் உருவாகின்றன.

இந்நிலையில் தேர்வு எழுதி தயார் நிலையில் உள்ள பத்தாயிரம் கேங்மென் பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணையை வழங்குவதில் காலதாமதம் செய்வது ஏற்புடையதல்ல. இந்தக் காலதாமதத்தின் மூலம் பணி நியமனத்தில் தவறுகள் நடக்குமோ என்ற அச்சமும் தேர்வு எழுதியுள்ளவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் கேங்மேன் பதவிகளை உடல் தகுதி மற்றும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியாயமாக வழங்கிட வேண்டுமெனவும், காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டுமெனவும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மின்வாரியத் தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தி உள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஆகவே, மின்வாரியத்தில் பத்தாயிரம் கேங்மேன் பணியிடங்களையும், காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதர பணியிடங்களையும் வேலை வாய்ப்பின்றித் தவிக்கும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு வழங்கி, காலியுள்ள இடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது''.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x