Published : 12 Nov 2020 11:11 AM
Last Updated : 12 Nov 2020 11:11 AM
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, தமிழக அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் (9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும்), அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி /கல்லூரி விடுதிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும், வரும் 16-ம் தேதி திறக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவியதால், கடந்த 9-ம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் கருத்துக் கேட்கப்பட்டது. இந்தக் கூட்டங்களில் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று (நவ. 12) அறிவித்தது.
இந்நிலையில், இது தொடர்பாக, திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று, தனது முகநூல் பக்கத்தில், "தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு; பள்ளிகள் திறப்புத் தேதி குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு இந்த அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது.
எந்த முன்யோசனைகளும் இல்லாமல் அறிவிப்பதும், பின்னர் அதிலிருந்து பின்வாங்குவதும் எடப்பாடி பழனிசாமி அதிமுக அரசின் வழக்கமாக ஆகிவிட்டது. கரோனாவை விட அரசின் அறிவிப்புகளின் மூலமாக எழும் பீதிகள்தான் அச்சம் தருவதாக உள்ளது.
குழப்பவாதிகள் கையில் அரசு இருக்கிறது என்பதற்கு பள்ளித் திறப்பு உதாரணம் ஒன்றே போதும்! குழப்ப அறிவிப்புகளின் மூலமாக மக்களை மேலும் மேலும் குழப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்!" எனப் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT