Published : 13 Mar 2014 01:26 PM
Last Updated : 13 Mar 2014 01:26 PM
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை வலை வீசித் தேடி வருவதாக சொல்லப்படுகிறது.
இப்போது தூக்கி சுமக்கத் திராவிடக் கட்சிகள் இல்லாததால் தேர்தல் களத்துக்கே வரவே காங்கிரஸார் தயங்குகின்றனராம். தேர்தலில் போட்டியிடவில்லை என வாசன் அறிவித்துவிட்டார். ப.சிதம்பரத்துக்கும் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்கிறார்கள். மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறைக்குப் பதிலாக டெல்லியைத் தேர்ந்தெடுப்பதாகக் கூறுகிறது காங்கிரஸ் வட்டாரம்.
ராகுல் கேட்டுக்கொண்டால்
தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் ராகுல் உத்தரவிட்டால் தேர்த லில் போட்டியிட உள்ளனராம். என்றாலும் ராமநாதபுரத்தில் திருநாவுக்கரசர், ஆம்ஸ்ட்ராங்; சிதம்பரத்தில் மணிரத்தினம், தற்போதைய காங்கிரஸ் எம்.பி-க்களில் நெல்லை ராமசுப்பு, கடலூர் கே.எஸ்.அழகிரி, காஞ்சிபுரம் விஸ்வநாதன் ஆகியோர் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர். கிருஷ்ணசாமி, சித்தன், ஆருண் உள்ளிட்டோர் வயதைக் காரணம் காட்டி ஒதுங்குவதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் ஓட்டு 6 சதவீதத்துக்குள்தான்
இதுகுறித்து அரசியல் விமர்சகரான ரவீந்திரன் துரைசாமி ‘தி இந்து’விடம் கூறியதாவது: தமிழகத்தில் காங்கிரஸுக்கு 10 சதவீதம் ஓட்டு இருப்பதாக வாசன் கூறுவது தவறு. 1999 தேர்தலின்போது புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும் த.மா.க கூட்டணியில் இருந்தும் காங்கிரஸ் 6 சதவீதம் ஓட்டுகள்தான் பெற்றன. 2001-ல் நடந்த விரிவுப்படுத்தப்படாத சென்னை நகராட்சி மேயர் தேர்தலில் வசந்தகுமார் பெற்ற ஓட்டுக்களில் பாதி அளவுகூட, விரிவுப்படுத்தப்பட்ட சென்னையில் 2011 மேயர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சைதை ரவி பெறவில்லை. எனவே, காங்கிரஸின் ஓட்டு 6 சதவீதத்துக்கும் கீழ்தான்” என்றார்.
’கை’ கொடுக்காத முஸ்லிம் ஓட்டுகள்
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியிலிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ளது. இந்திய யூனியன் காயிதே மில்லத் லீக் உட்படச் சில முஸ்லிம் அமைப்புகள் அதிமுக-வு அணியில் உள்ளன. இதனால், காங்கிரஸுக்கு முஸ்லிம் ஓட்டுகள் கிடைப்பதும் சந்தேகமே.
அதிருப்தியில் நாடார் சமூகம்
எண்ணூர் துறைமுகத்துக்குக் காமராஜர் பெயரை வைத்தது நாடார் ஓட்டுகளை வசப்படுத்தும் என்று வாசன் நம்புகிறார். ஆனால், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கொள்கை, இலங்கை விவகாரம் போன்ற காரணங்களால் தமிழகத்தில் நாடார் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு வணிகர் அமைப்புகளும் காங்கிரஸ் மீது கோபத்தில் உள்ளன.
சமீபத்தில் நாடார் சமூகத்தினர் மோடியை சந்தித்து, இந்தியா முழுவதும் மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜரின் பெயரை வைக்கும் கோரிக்கையை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக உறுதி கொடுத்திருக்கிறார் மோடி.
இவை எல்லாவற்றையும் விட, தேர்தல் செலவுக்கு கட்சி மேலிடம் கொடுக்கும் தொகையைத் தாண்டி, சொந்த பெட்டியிலிருந்து எத்தனை கோடி செலவளிக்க வேண்டியிருக்குமோ என்கிற கணக்கையும் போடுகிறார்களாம் சில காங்கிரஸ் தலைவர்கள். முதலைத் தூக்கி முதலை வாயில் போட்டதுபோல் ஆகிவிடுமோ என்பது அவர்கள் அச்சமாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT