Last Updated : 11 Nov, 2020 05:41 PM

2  

Published : 11 Nov 2020 05:41 PM
Last Updated : 11 Nov 2020 05:41 PM

வீரமாமுனிவருக்கு மணிமண்டபம்: தாமிரபரணி உபரிநீரை உப்பாறு உள்ளிட்ட நதிகளுக்குக் கொண்டு செல்ல புதிய திட்டம்- முதல்வர் அறிவிப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி வந்த தமிழக முதல்வர் பழனிசாமி காமநாயக்கன்பட்டியில் வீரமாமுனிவருக்கு மணிமண்டபம்: தாமிரபரணி உபரிநீரை உப்பாறு, மலட்டாறு, கல்லாறு, வைப்பாறு நதிகளுக்கு கொண்டு செல்ல ரூ.264 கோடியில் புதிய திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

தமிழக முதல்வர் பழனிசாமி நாகர்கோவிலில் இருந்து இன்று காலை 8 மணிக்கு தூத்துக்குடி வந்தார். அவரை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

வல்லநாடு முதல் தூத்துக்குடி வரை வழிநெடுக முதல்வருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காலை 9 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் பழனிச்சாமி அங்கு நிறுவப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன நேரியியல் முடுக்கி கருவி மற்றும் மத்திய ஆய்வக கட்டிடம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு நேரில் தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த முதல்வர் பழனிச்சாமி, அங்கு அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் மாவட்டத்தில் ஏற்கனவே முடிவுற்ற ரூ.39.09 கோடி மதிப்பிலான 18 திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

ரூ.328.66 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 15,792 பயனாளிகளுக்கு ரூ.37.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

2 தொழில் பூங்கா:

இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி பேசும்போது, அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, தமிழகத்திலும் சரி, தூத்துக்குடி மாவட்டத்திலும், கொரோனோ வைரஸ் நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து, இயல்பு நிலை திரும்புகின்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அல்லிக்குளம் பகுதியில் புதிய தொழில் பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. விளாத்திகுளம் வட்டம், வைப்பார் கிராமத்தில் ஒரு தொழில் பூங்கா அமைக்க 1019 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் சிப்காட் நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்தொழிற் பூங்காவின் மூலம் சுமார் ரூ.2000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

சென்னை - கன்னியாகுமரி தொழில் பெருவழி திட்டத்தின் கீழ், திருச்செந்தூர் -பாளையங்கோட்டை வரை சுமார் 50 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூபாய் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார் முதல்வர்.

செய்தியாளர்களுக்கு முதல்வர் அளித்த பேட்டி:

தூத்துக்குடி விமான நிலைய விரிவாகத்துக்கு 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் 106 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக கூறியிருக்கிறார்கள். அதையும் விரைவில் எடுத்துக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோவில்பட்டி, கயத்தாறு, புதூர், விளாத்திகுளம் வட்டாரங்களை சேர்ந்த 248 ஊரக குடியிருப்புகளுக்கான ரூ.94.04 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் வரும் டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.995 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 60 எம்எல்டி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் ஆலை ரூ.634 கோடியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில் முதலீடு:

சென்னையில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஸ்பிக் நிறுவனம் ரூ.3,806 கோடி மதிப்பீட்டில் 800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உரங்கள் உற்பத்தி விரிவாக்க திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த திட்டம் ஏப்ரல் 2021-ல் நிறைவேறும்.

ஸ்பிக் கிரீன் ஸ்டார் உர நிறுவனம் ரூ.1525 கோடியில் 720 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் கந்தக அமில ஆலையை விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ரூ.550 கோடியில் 600 பேருக்கு வேலை கிடைக்கும் வகையிலும், பிரான்ஸ் நிறுவனம் ரூ.2000 கோடியில் 600 பேருக்கு வேலை கிடைக்கும் வகையிலும் காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி ஆலைகளை அமைக்கின்றன.

இதேபோல் பல கோடி மதிப்பீட்டில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பல புதிய தொழிற்சாலைகள் தூத்துக்குடியில் அமையவுள்ளன.

பெரியதாழையில் கடல் அரிப்பை தடுக்க ரூ.30 கோடியில் தூண்டில் பாலத்தை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறவுள்ளது. ஆலந்தலையில் ரூ.52.60 கோடியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர், கீழ வைப்பாரில் ரூ. 12.20 கோடியில் தூண்டில் வளைவு விரிவாக்கம், வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ.1.20 கோடியில் கடல் அரிப்பு தடுப்பு பணி ஆகிய பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

தாமிரபரணி உபரிநீர்:

தாமிரபரணி ஆற்றில் செல்லும் உபரி வெள்ளநீரை நீரேற்றம் திட்டத்தின் மூலம் உப்பாறு, மலட்டாறு, கல்லாறு, வைப்பாறு நதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் ரூ.264 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். தாமிரபரணி ஆற்றில் வெள்ளக்காலங்களில் வரும் உபரநீரை சீவலப்பேரி தடுப்பணையில் இருந்து 40 மீட்டர் உயரத்துக்கு நீரேற்றம் செய்து 12.5 கி.மீ. தொலைவில் உள்ள பூவாணி, கொசவன்குளம் பகுதிக்கு கொண்டு சென்று, அங்கிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவுக்கு புதிய கால்வாய் அமைத்து உப்பாறு, மலட்டாறு, கல்லாறு, வைப்பாறு வரை கொண்டு சென்று முத்தலாபுரம் பகுதியில் இணைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 200 கன அடிநீர் வீதம் நீரேற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தாமிரபரணி ஆற்றில் கடலில் வீணாக கலக்கும் 173 மில்லியன் கன அடி நீரை பாசனத்துக்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் வறட்சியான பகுதியில் நிலத்தடிநீர் செறிவூட்டப்பட்டு, விவசாயம் மேம்படும்.

2000 மினி கிளினிக்:

தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி மற்றும் சிவஞானபுரம் ஆகிய இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உடனடியாக அமைக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 2000 மினி கிளினிக் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் தலா ஒரு மருத்துவர், செவிலியர், பணியாளர் இருப்பார்கள். ஒருவொரு தொகுதிக்கும் 5 அல்லது 6 மினி கிளினிக் திறக்கப்படும். இவை மாலை நேரத்தில் செயல்படும். இன்னும் ஒரு மாதத்தில் இது தொடங்கப்படும்.

வீரமாமுனிவருக்கு மணி மண்டபம்:

தமிழ் அகராதியின் தந்தை என போற்றப்படும் வீரமாமுனிவருக்கு தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டி பரலோக மாதா ஆலய வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் முழு உருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்படும்.

கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபம் ரூ.73 லட்சம் செலவில் புனரமைக்கப்படும். மணிமண்டபத்தில் உள்ள அவரது மார்பளவு சிலையை மாற்றி குதிரையில் அமர்ந்து போர் புரிவது போன்ற கம்பீர தோற்றத்துடன் கூடிய புதிய சிலை நிறுவப்படும். கயத்தாறில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் அமைக்கப்படும்.

முடிவைத்தானேந்தல் கிராமத்தில் ஆவின் சார்பில் 50 ஆயிரம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட புதிய பால்பண்ணை ரூ.45.75 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். தூத்துக்குடியில் ரூ. 2 கோடி மதிப்பிட்டில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என்றார் முதல்வர்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜூ, சி.விஜயபாஸ்கர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x