Published : 11 Nov 2020 05:25 PM
Last Updated : 11 Nov 2020 05:25 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக மதுரைக்கு புதிய ரயில் தடம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கார்த்தி சிதம்பரம் எம்.பி.,க்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் இருந்து கல்வி, மருத்துவத்திற்காக மதுரை செல்லும் மக்கள், காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர், மேலூர், வழியாக மதுரைக்கு புதிய ரயில் தடம் அமைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து அவ்வழியே 88 கி.மீ.,-க்கு புதிய ரயில் தடம் அமைக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அறிவித்தது. கடந்த 2013-ம் ஆண்டு காரைக்குடியில் இருந்து குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, பட்டமங்கலம், திருக்கோஷ்டியூர், திருப்பத்தூர் போன்ற ஆன்மிகதலங்களை இணைத்து மதுரை செல்லும் வகையில் ஆய்வுப் பணியும் நடந்தது.
மேலும் இப்பகுதிகளில் அதிகளவில் கட்டிடங்கள் இல்லாததால் நிலம் கையகப்படுத்துவதில் சிரமம் இல்லை எனவும் ஆய்வு அறிக்கையை ரயில்வே அதிகாரிகள் மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்து பல ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் புதிய வழித்தடம் அமைக்க வேண்டுமென கார்த்தி சிதம்பரம் எம்.பி., கடந்த ஆண்டு மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தி இருந்தார். ஆனால் நடவடிக்கை இல்லாததை அடுத்து, அதிருப்தி தெரிவித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி., மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு மீண்டும் கடிதம் அனுப்பி இருந்தார்.
இதையடுத்து காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக மதுரைக்கு புதிய ரயில் தடம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கார்த்தி சிதம்பரத்திற்கு பியூஸ் கோயல் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இத்தகவலை கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT