Published : 11 Nov 2020 04:24 PM
Last Updated : 11 Nov 2020 04:24 PM
எதிர்காலத்தில் மதச்சார்பற்ற கூட்டணி மிகுந்த ஒருங்கிணைப்போடு பணியாற்றினால் வகுப்புவாத பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை பிஹார் மாநிலத் தேர்தல் உறுதி செய்திருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
''பிஹார் மாநிலத்தில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன. 15 ஆண்டுகால மக்கள் விரோத நிதிஷ் குமார் ஆட்சி முடிவுக்கு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்துவிட்டன.
பிஹார் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆட்சி அமைக்கத் தேவையான எண்ணிக்கையை நெருங்குகிற வகையில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். பிஹாரில் மதச்சார்பற்ற கட்சிகளின் வலிமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பிஹார் மாநிலத் தேர்தலைப் பொறுத்தவரை மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றி வாய்ப்பை ஒவைசி கட்சி தடுத்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் மூலம் பாஜகவுக்கும், ஒவைசி கட்சிக்கும் ரகசிய உடன்பாடு இருக்குமோ என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிளவுபடுத்தி பாஜகவுக்கு உதவுகிற ஒவைசி போன்ற கட்சிகளின் விஷயத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
பிஹார் மாநிலத்தில் பிரதமர் மோடியின் தீவிரப் பிரச்சாரத்தின் மூலம் பாஜக, ஆர்.ஜே.டி. கூட்டணியை எவரும் வெல்ல முடியாது என்கிற பிம்பத்தைத் தேர்தல் முடிவுகள் தகர்த்துவிட்டன. எதிர்காலத்தில் மதச்சார்பற்ற கூட்டணி மிகுந்த ஒருங்கிணைப்போடு பணியாற்றினால் வகுப்புவாத பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை பிஹார் மாநிலத் தேர்தல் உறுதி செய்திருக்கிறது''.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT