Published : 11 Nov 2020 02:55 PM
Last Updated : 11 Nov 2020 02:55 PM
நான் விவசாயி என்பது குறித்து விவசாயமே தெரியாத ஸ்டாலின் சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை என தூத்துக்குடியில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடிக்கு இன்று காலை வருகை தந்த முதல்வர் பழனிசாமி, அங்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ 16 கோடியில் அமைக்கப்பட்ட புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் நேரியல் முடுக்கி என்ற நவீன கருவியின் செயல்பாட்டைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மேலும், மருத்துவக் கல்லூரியில் ரூ.71. 61 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மத்திய ஆய்வக கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், போலி விவசாயி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர், "நான் விவசாயி என்பது குறித்து விவசாயமே தெரியாத ஸ்டாலின் சான்றிதழ் அளிக்க தேவையில்லை. பதநீரில் சர்க்கரை கலந்துள்ளதா எனக் கேட்டவர் ஸ்டாலின். அவர் அப்படித்தான் கேட்பார். நான் அரசியலில் இருந்தாலும் இன்றும் நான் வேளாண் பணிகளைச் செய்கிறேன். குடிமராமத்து திட்டத்தைக் கொண்டுவந்தோம், தடுப்பணைகள் கட்டினோம். வேளாண் பணிகளை பாதுகாக்க எடுத்த இதுபோன்ற நடவடிக்கைகளால் இன்று நீர் மேலாண்மை திட்டத்தில் தேசிய விருது பெற்றுள்ளோம்" என்றார். அதேபோல் தூத்துக்குடிக்கு என்னென்ன நலத்திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது என்பதை மக்கள் அறிவர். அதைப்பற்றி தொகுதி எம்.பி. கனிமொழிக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை.
தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:
பள்ளிகளைத் தற்போது திறந்தால் கொரோனா பரவும் என சிலர் அச்சம் தெரிவித்தனர். பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பில் முடிவு எடுக்கப்படும்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை நவீனமாக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை தற்போது 35% முதல் 40% வரை குறைந்துள்ளது.
தமிழகத்தில் உயர்க்கல்வி பயில்வோர் எண்ணிக்கை 50% ஆக அதிமுக ஆட்சியில் உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கிவிட்டன. 6 சட்டக்கல்லூரிகள் தொடங்கியுள்ளோம்.
ஸ்டெர்லைட் பிரச்சினைக்கு ஸ்டாலின் தான் காரணம். சட்டப்பேரவை அவைக்குறிப்பில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கப்படும் என ஸ்டாலின் பேசியது உள்ளது. ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு ஒப்புதல் வழங்கிவிட்டு இன்று பழியை எங்கள் மீது சுமத்துகின்றனர்.
கல்வித்துறையில் தமிழக அரசு சாதனை படைத்து வருகிறது. வளர்ந்து நாடுகள்கூட மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தரவில்லை. ஆனால் அதை அதிமுக ஆட்சி சாதித்துள்ளது.
மாநிலம் முழுவதும் நிறைய கல்லூரிகளைத் தொடங்கி, கல்வித்தரத்தை உயர்த்தியுள்ளோம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT