Published : 11 Nov 2020 03:03 PM
Last Updated : 11 Nov 2020 03:03 PM
அதிமுக அரசு தமிழகத்தின் எந்த உரிமையையும் விட்டுக் கொடுக்காது. நட்புக் கட்சி என்பது வேறு என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் இன்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு விஷயம் தெரியாமல் பேசுவதே வாடிக்கையாக இருக்கிறது. சொல்லப்படுகிற குற்றச்சாட்டு சம்பவங்கள் தொடர்பாக என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே அவர் பேசி வருகிறார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி உண்மை வெளிவர வேண்டும் என்பதில் எங்களைவிட யாருக்கும் அக்கறை இல்லை.
இதில் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம். ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் அப்போலோ மருத்துவமனை நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளதால் அது நிலுவையில் உள்ளது. இதில் அரசு என்ன செய்ய முடியும்?
7 பேர் விடுதலை குறித்துப் பலமுறை தெளிவாகப் பதில் சொல்லியும், இதைப்பற்றித் தெரியாமல் எதையாவது ஸ்டாலின் பேசி வருகிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்குத் தீர்மானம் போட்டவர்கள் திமுகவினர். கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் 7 பேர் விடுதலை பற்றி பேச எந்தத் தார்மீக உரிமையும், தகுதியும் கிடையாது.
திமுக ஆட்சிக் காலத்தில்தான் நளினியைத் தவிர பிறருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது உச்ச நீதிமன்றமாகும். அவர்களைக் காப்பாற்றுவதாகக் கூறித் திமுகவினர் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.
7 பேர் விடுதலை தொடர்பாகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் அனுமதிக்காக நிலுவையில் உள்ளது. இந்த விஷயத்தில் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாதவர்கள் திமுகவினர்.
காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சியில்தான் நீட் தேர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாகச் சட்டப்பேரவையில் நான் கேட்டபோது, ஸ்டாலினால் பதில் சொல்ல முடியவில்லை. இவர்களே சட்டத்தை நிறைவேற்றிவிட்டு இப்போது இப்படிப் பேசுகிறார்கள்.
நீட்டுக்குத் தடை கோரிய நிலையில் அதற்கு மாற்றாக என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து முதல்வர் பழனிசாமி அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 7.5% தீர்மானத்தைக் கொண்டுவந்த ஒரே முதல்வர் பழனிசாமிதான். இதற்கு அனுமதி பெறுவதற்கு ஆளுநரிடம் ஒப்புதல் கிடைக்கத் தாமதமானதால், முதல்வர் உரிய நேரத்தில் மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டைச் செயல்படுத்தினார். ஆளுநரை எதிர்த்துப் போராட்டம் என அறிவித்த திமுக ஏன் பின்வாங்கியது?
அதிமுக அரசு தமிழகத்தின் எந்த உரிமையையும் விட்டுக் கொடுக்காது. நட்புக் கட்சி என்பது வேறு. மாநில உரிமைகள் விவகாரத்தில் அதிமுக அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது''.
இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT