Published : 11 Nov 2020 01:42 PM
Last Updated : 11 Nov 2020 01:42 PM
தமிழகத்தில் டிசம்பர் மாதத்துக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தேனியைச் சேர்ந்த ராம்பிரசாத், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கரோனா நோய்க்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் நவ.16 முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் மத்தியில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. போக்குவரத்து முழுமையாக இயங்காத நிலையில் மாணவர்கள் வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படும்.
பல்வேறு கல்வி நிறுவனங்கள் கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாக செயல்படுத்தப்பட்டன. அந்த கல்வி நிறுவனங்கள் முழுமையாக சுத்தப்படுத்தப்படாமல் திறக்கப்பட்டால் கரோனா பரவல் அதிகமாகும்.
கரோனா பரவலைத் தடுக்க பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது பலனற்றாகிவிடும். எனவே, நவ. 16 முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பில், பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன. பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க விருப்பம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. பல நாடுகளில் கரோனாவின் 2-ம் அலை பரவி வருகிறது.
நீதிபதிகள் உட்பட பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் குழந்தைகள், மாணவர்கள் பாதிக்கப்பட்டால் சிரமம் அதிகமாக இருக்கும். ஏற்படும்.
இதனால் டிசம்பர் மாதத்துக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என நீதிமன்றம் கருதுகிறது. இது தொடர்பாக அரசு சிறந்த முடிவெடுக்கும். பள்ளிக், கல்லூரிகளை திறப்பதில் பிற மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்றனர்.
பின்னர், விசாரணையை நவ.20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT