Published : 11 Nov 2020 12:50 PM
Last Updated : 11 Nov 2020 12:50 PM
தூத்துக்குடியைச் சேர்ந்த இளம் பெண் கோவை கல்லூரியில் நடைபெற்ற செய்முறைத் தேர்வில் பங்கேற்ற நாளில் தூத்துக்குடியில் அவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் வழங்கியது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பதிவாளர், சார் பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
நான் பிளஸ் 2 படிக்கும் போது டார்வின் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் என்னை ஒருதலையாக காதலித்தார். பிளஸ் 2 முடித்து நான் கோவையில் தனியார் கல்லூரியில் பி.டெக் சேர்ந்தேன்.
தற்போது டார்வின் தன்னுடன் சேர்ந்த வாழுமாறு என்னைக் கட்டாயப்படுத்தி வருகிறார்.
அவருக்கும், எனக்கும் தூத்துக்குடி லூர்தம்மாள் ஆலயத்தில் 8.8.2017-ல் திருமணம் நடைபெற்றதாக கீழுர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெற்றிருப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து தகவல் உரிமைச் சட்டத்தில் கீழுர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தகவல் பெற்ற போது, போலி ஆவணங்களை பயன்படுத்தி லூர்தம்மாள் ஆலயத்தில் எனக்கும், அவருக்கும் திருமணம் நடைபெற்றதாக கூறி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது தெரியவந்தது.
ஆவணங்களுடன் பங்கு தந்தையின் சான்றிதழும் இணைக்கப்பட்டிருந்தது. அதுபற்றி பங்கு தந்தையிடம் விசாரித்த போது குறிப்பிட்ட நாளில் ஆலயத்தில் அப்படியொரு திருமணம் நடைபெறவில்லை என்றும், அதுபோன்ற சான்றிதழ் தான் வழங்கவில்லை என்றும் தெரிவித்தார். போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி எனக்கும், அவருக்கும் திருமணம் நடைபெற்றதாக பதிவு செய்துள்ளார் டார்வின்.
திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் நாளில் நான் தூத்துக்குடியில் இல்லை. கல்லூரியில் செய்முறை தேர்வில் பங்கேற்றேன். அதற்கான ஆன்லைன் வருகை பதிவேடு உள்ளது. இருப்பினும் போலி திருமண பதிவு அடிப்படையில் தன்னுடன் வந்து வாழுமாறு டார்வின் ஜனவரி மாதம் முதல் என்னை மிரட்டி வருகிறார்.
எனவே கீழூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட திருமண பதிவு சான்றிதழை ரத்து செய்ய மாவட்ட பதிவாளரிடம் மனு அளித்தேன். அவர் என் மனுவை நிராகரித்துவிட்டார். எனவே கீழுர் சார் பதிவாளர் வழங்கிய திருமண பதிவு சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பதிவாளர், கீழுர் சார் பதிவாளர் மற்றும் டார்வின், புன்னைக்காயர் புனித சேவியர் ஆலய பங்குதந்தை பிராங்கிளின் ஆகியோர் நவ. 30-க்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT