Published : 11 Nov 2020 12:48 PM
Last Updated : 11 Nov 2020 12:48 PM

மெரினா கடற்கரையைத் திறக்க அரசு தாமதித்தால் தலையிட்டு உத்தரவிட நேரிடும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை

திரையரங்குகளைத் திறக்கும்போது கடற்கரையைத் திறக்க முடியாதா? சென்னை மெரினா கடற்கரையைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறப்பதைத் தாமதித்தால், நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், கடற்கரையைத் தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மெரினாவைச் சுத்தப்படுத்துவதற்குப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், லூப் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்காமல் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை மாநகராட்சி ஆணையரும், காவல் ஆணையரும் மெரினாவில் திடீர் சோதனைகள் நடத்தியதாகவும் குறிப்பிட்டார். மெரினா கடற்கரையில் தள்ளுவண்டிகளுக்கான டெண்டரைத் திறக்கத் தனி நீதிபதி தடை விதித்துள்ளதால், அந்த டெண்டரைத் திறக்க இயலவில்லை எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, தனி நீதிபதி முன் உள்ள வழக்கை, இந்த வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரை பொதுமக்களுக்கு எப்போது திறக்கப்படும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, நவம்பர் இறுதி வரை மெரினாவைத் திறக்க வாய்ப்பில்லை என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார்.

இதையடுத்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டு, திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையைப் பொதுமக்களுக்குத் திறப்பதில் தாமதம் ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விஷயத்தில் அரசு முடிவெடுக்காவிட்டால், நீதிமன்றம் உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

பின்னர் நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 18-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x