Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM

தென் மாநில மக்களின் நீண்ட நாள் கனவு; உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைவது எப்போது?- அனைத்து தரப்பினரும் அழுத்தம் தர திமுக எம்பி பி.வில்சன் வலியுறுத்தல்

சென்னை

தென் மாநில மக்களின் நீண்டநாள் கனவாக உள்ள உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைய அனைத்து அரசியல் கட்சியினரும் அரசியல் பேதங்களை மறந்து ஒட்டுமொத்தமாக மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்கிறார் திமுக எம்பியும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன்.

இந்திய உச்ச நீதிமன்றம் தலைநகரான டெல்லியில் இயங்கி வருகிறது. நாட்டின் கடைகோடியில் இருக்கும் சாமானிய மக்கள் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி நியாயம் பெறபல லட்சங்களையும், காலநேரத்தையும் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதனால் தமிழகத்தை மையமாக வைத்து கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 தென் மாநிலங்களுக்கும் பொதுவாக சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை அமைக்க வேண்டுமென்பது தென் மாநில மக்களின் நீண்டநாள் கனவாக இருந்து வருகிறது.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டுவர தொடர்ச்சியாக குரல் எழுப்பி வரும் திமுக எம்பி.யும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறியதாவது:

தற்போதுள்ள சூழலில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு நபர் வழக்கு தொடரகுறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை செலவாகிறது. அதன்பிறகு வழக்கறிஞர்களுக்கு பல லட்சங்களை செலவு செய்ய நேரிடுகிறது. இப்படி எல்லோராலும் அதிகபணம் செலவு செய்து நீதியைப் பெற முடியாத நிலை உள்ளது.

தற்போது நாட்டில் உள்ள 133கோடி மக்கள் தொகைக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன் சேர்த்து 34 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கையானைப் பசிக்கு சோளப்பொறி கதையாகத்தான் உள்ளது. தற்போது இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 20 நீதிபதிகள் என்ற விகிதத்தில் தான் நீதிபதிகள் நியமனம் உள்ளது.

இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையில் நீதிபதிகள் உள்ளதால் ஒவ்வொரு வழக்குக்கும் அதிக நேரம் ஒதுக்கி விசாரிக்க முடியாதநிலை உள்ளது. இதனால் பல நேரங்களில் பெரும்பாலான வழக்குகள் தள்ளுபடியாகின்றன. கடந்த 2011-ம்ஆண்டு கணக்கெடுப்பின்படி உச்சநீதிமன்றத்தில் டெல்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களில் இருந்துதான் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தென் மாநிலங்களில் இருந்து தாக்கலாகும் வழக்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனவேதான் சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக குரல் கொடுத்து வருகிறோம். இதன்மூலம் அதிகாரப் பரவல் கிடைக்கும்.

இதுதொடர்பாக நாடாளுமன்றம், மத்திய சட்ட அமைச்சர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, அட்டர்னி் ஜெனரல், குடியரசுத் தலைவர், பிரதமர் என அனைத்து தரப்புக்கும் எம்பி என்ற முறையில் நேரடியாகவே கோரிக்கை விடுத்துள்ளேன். அவர்களும் சாதகமான பதில் அளித்துள்ளனர். பாராளுமன்ற நிலைக்குழு மற்றும் சட்டக்குழுவும் உச்ச நீதிமன்ற கிளைகளை அமைக்க பரிந்துரை செய்துள்ளது.

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைந்தால் கேரளா, கர்நாடகா என 6 தென் மாநில மக்களுக்கும் விரைவான நீதி கிடைக்கும். காலவிரயம், பண விரயம் ஆகாது. இந்த கிளையில் குறைந்தபட்சம் 15 நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அப்படி நியமித்தால் தென்மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படவும், சமூக நீதி மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முறையாக பேணுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த அரசு சட்டக் கல்லூரிக்கான பழமையான, பாரம்பரியமிக்க கட்டிடம் தற்போது காலியாக இருப்பதால் அந்த இடத்தில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்கலாம். இதனால் கீழமை நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என அனைத்தும் ஒரே வளாகத்தில் அமையும்.

அரசியல்ரீதியாக சிலர் தங்களின் சுயலாபத்துக்காக உச்ச நீதிமன்ற கிளைகளை அமைக்க முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் அரசியல் பேதங்களை மறந்து ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை வர சாத்தியமாகும்.

இவ்வாறு பி.வில்சன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x