Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM

அமெரிக்க கரோனா கட்டுப்பாட்டு குழுவில் ஈரோட்டைச் சேர்ந்த செலின் ராணிக்கு இடம்

ஈரோடு

புதிய அமெரிக்க அதிபராக தேர்வு பெற்றுள்ள ஜோ பைடன் அமைத்துள்ள கரோனா கட்டுப்பாட்டுக் குழுவில் ஈரோடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் செலின் ராணி கவுண்டர் உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர புதிய வழிகாட்டுக் குழுவினை அமைத்துள்ளார். 13 பேர் கொண்ட இக்குழுவின் தலைமைப்பொறுப்பில் 3 பேர் உள்ளனர். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி இடம்பெற்றுள்ள நிலையில், குழு உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மருத்துவர் செலின் ராணி கவுண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1998 முதல் 2012 வரையிலான கால கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, மால்வாய், எத்தியோப்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் காசநோய், ஹெச்.ஐ.வி. தொடர்பான மருத்துவ சேவை, ஆராய்ச்சிகளை செலின் ராணி மேற்கொண்டுள்ளார். அமெரிக்க காசநோய் தடுப்பு பிரிவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிஉள்ளார். நியூயார்க் பல்கலைக் கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக செலின் ராணி தற்போது பணியாற்றி வருகிறார்.

செலின் ராணி குறித்து அவரது பெரியப்பா மகன் தங்கவேல் கூறியதாவது: செலின் ராணியின் தந்தை ராஜ் கவுண்டர்.

இவர், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 1966-ம் ஆண்டில் அமெரிக்கா சென்று, போயிங் விமான நிறுவனத்தில் பணியாற்றி, அந்நிறுவன இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர். அந்நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வருகிறார்.

அவருக்கு 3 பெண் குழந்தைகள், அதில் மூத்தவர் தான் செலின் ராணி. இவர் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர். இதுவரை 4 முறை மொடக்குறிச்சி வந்துள்ளார். ராஜ் பவுண்டேசன் என்ற பெயரில் மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மேம்பாட்டுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் மக்களை பாதிக்கும் நோய்கள் குறித்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் ஆராய்ச்சி செய்துள்ளார். 35 வயதான செலின் ராணியின் கணவர் கிராண்ட், ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார் என்றார்.

ஸ்டாலின் வாழ்த்து

இதற்கிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது முகநூல் பதிவில், ‘அமெரிக்க பெருந்தொற்று தடுப்பு அணியில் செலின் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் முக்கியப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதைக்கண்டு பெருமைப்படுகிறேன்’ என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x