Published : 02 May 2014 09:55 AM
Last Updated : 02 May 2014 09:55 AM

தமிழக கடற்கரைகளை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவுத்துறை

கடந்த காலங்களில் மும்பையில் குண்டு வெடிப்பு நடத்தியதின் பின்னணியில் இருந்த பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பு, கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளை குறிவைத்து தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் சிலருக்கும் இதில் தொடர்பு இருக்குமோ என்கிற கோணத்தில் மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

விலைக்கு வாங்கும் ஐ.எஸ்.ஐ.

ஆட்களை விலைக்கு வாங்குவதும், மதத்தின் பெயரால் மூளைச் சலவை செய்வதும் ஐ.எஸ்.ஐ-யின் மிகப் பெரிய பலம். இந்தியாவில் நடந்த பெரும்பான்மை குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ-க்கு தொடர்புள்ளதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன.

2008 மும்பை தாக்குதலுக்கு பிறகு மும்பை உள்ளிட்ட மேற்கு கடற்கரை பகுதிகளில் கண்காணிப்புகள் பலப்படுத்தப் பட்டதால் சமீபத்திய ஆண்டுகளாக ஐ.எஸ்.ஐ-யின் பார்வை கிழக்கு மற்றும் தமிழக கடற்கரைகளின் மீது திரும்பியுள்ளதாக சந்தேகிக்கின்றனர் அதிகாரிகள்.

குறிப்பாக, ராமேசுவரம், வேதாரண்யம், சாயல் குடி - கன்னிராஜாபுரம், பூம்புகார், கோடியக்கரை, சென்னை - காசிமேடு, எண்ணூர் மற்றும் சென்னை - ஆந்திரா கடற்கரையோர கிராமங்கள் ஆகிய பகுதிகளை ஐ.எஸ்.ஐ-யின் உளவாளிகள் நோட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேற்கண்ட பகுதிகளில் போதைப் பொருட்கள் மற்றும் தங்கம் அதிக அளவு கடத்தப்படுவதே அங்கு நிலவும் பாதுகாப்பின்மையை உணர்த்துகிறது.

தமிழக கடற்கரைகளுக்கு சீல்!

இவ்வளவு தெரிந்தபின்பும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய புலனாய்வு அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். “ சாதாரண மாக நினைத்துவிட வேண்டாம். மேற்கண்ட அனைத்து கடற்கரை பகுதிகளையும் கண்ணுக்கு தெரியாத வகையில் சீல் வைத்து விட்டோம்.

கடற்கரை மற்றும் அதையொட்டிய நகரங்களிலும் மத்திய புலனாய்வு அமைப்பின் முக்கியப் பிரிவுகளான “டைரக்டரேட் ஆஃப் நேவல் இண்டெலிஜென்ஸ், ஆல் இண்டியா ரேடியோ மானிட்டரிங் சர்வீஸ், சிக்னல்ஸ் இண்டெலிஜென்ஸ் டைரக்டரேட், நார்கோட்டிக்ஸ் கண்ட்ரோல் பீரோ” ஆகிய பிரிவுகள் ஒருங்கிணைந்து கண்காணித்து வருகின்றன. நம்பகமான தகவல்களும் சில நபர்களுமே பிடிபட்டுள்ளனர். விரைவில் நிறைய விஷயங்கள் வெளியே வரும்” என்றார்.

இலங்கையில் கால் பதித்த ஐ.எஸ்.ஐ.

சென்னையில் கைது செய்யப் பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் அளித்த வாக்குமூலத்தில் இலங்கையில் இருக்கும் பாகிஸ்தான் துணைத் தூதரகத்தின் அதிகாரியான ஆமீர் சுபேர் சித்திக் என்பவர் தன்னை ஐ.எஸ்.ஐ. உளவாளியாக மாற்றினார் என்று கூறியுள்ளார். பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆட்களை அனுப்பி அங்கிருந்து தமிழக கடற்கரைகள் வழியாக ஊடுருவ ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

தூதரக அதிகாரிகள் உதவுவது ஏன்?

இதுகுறித்து வெளியுறவுத் துறையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பாகிஸ்தான் போன்ற நேரடி எதிரி நாடுகளின் துணைத் தூதரங்கள் மாநிலங்களில் அமைக்க இந்தியாவில் அனுமதி கிடையாது. டில்லியின் சாணக்கியபுரியில் இருக் கும் ஒரே ஒரு பாகிஸ்தான் தூதரக அலுவலகம் மட்டுமே பாகிஸ் தானின் மொத்த வெளியுறவு விவகாரங் களுக்கான மையம்.

நீண்டகாலமாக பாகிஸ்தான் மும்பையில் ஒரு துணைத் தூதரகம் அமைக்க கோரிக்கை விடுத்துவருகிறது. ஆனால், இந்திய அரசு மறுத்துவிட்டது. அனைத்து நாடுகளின் உளவு அமைப்புகளுமே அந்நிய நாடுகளில் இருக்கும் தங்களது தூதரகங்களை உளவு விஷயங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன. இது சட்டப்படி குற்றம் என்றாலும் வேறு வழியில்லை. தமிழக கடற்கரைகளை குறிவைக்கும் ஐ.எஸ்.ஐ-க்கு தமிழகத்தில் பாகிஸ்தான் தூதரகம் இல்லாததால் அது, கொழும்புவில் இருக்கும் தனது துணைத் தூதரகத்தை பயன்படுத்திக் கொள்கிறது” என்றார்.

கண்காணிப்பில் பாக் தூதரகம்

டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 20 பணியாளர்கள் மீது கண்காணிப்பை பலப்படுத்தி இருப்பதாக உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.பி-யின் நேஷனல் டெக்னிக்கல் ரிசர்ச் ஆர்கனைசேஷன் பிரிவு அதற் கான பணிகளை மேற் கொண்டுள் ளது என்கின்றனர் அதிகாரிகள்.

குறிப்பாக, தூதரக இயக்குநர் பொறுப்பில் இருக்கும் ஒருவரின் பாதுகாப்புப் பணியாளர் மற்றும் மூன்று கவுன்சிலர்களின் தகவல் தொடர்புகளில் சந்தேகம் வலுத் துள்ளதாக டெல்லி உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x