Published : 10 Nov 2020 08:50 PM
Last Updated : 10 Nov 2020 08:50 PM
அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான இறுதி பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள், மற்றும் கரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைசர் கடம்பூர் ராஜீ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொழில்துறை முதன்மை செயலார் முருகானந்தம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கோபால், வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது கரோனா கட்டுப்படுத்தலை தடுக்கும் வகையில் கோவிட் பரிசோதனையை தொடர்ந்து நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து விவசாயிகள், மீனவ பிரதிநிதிகளுடன் முதல்வர் பழனிசாமி கலந்தாலோசனை செய்தார். அப்போது குமரி மாவட்டத்தின் ஜீவாதாரமாக திகளும் பழையாறு, நாங்சில்நாடு புத்தனாறு ஆறுகளை புனர் நிர்மானம் செய்து கொடுக்க வேண்டும். குமரி மலையோரங்களில் உள்ள விவசாய பயிர்களை வன விலங்குகளிடமிருந்து காத்து பயிர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரப்பர் பயிரை காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதோடு கேரள அரசைப்போல் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யவேண்டும் என வேளாண் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்கு முறையாக நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மீனவர்கள் தரப்பில் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அடிக்கடி உயிரிழப்பு ஏற்பட்டு மீனவ குடும்பங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் துறைமுகத்தை புனரமைப்பு செய்து பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். குளச்சல், மண்டைக்காடு, தூத்தூர், முள்ளூர்துறை, ராமன்துறை உட்பட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கடலரிப்பு தடுப்பு சுவர், மற்றும் கடல் சீற்றத்தின்போது மீனவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வலியுறுத்தினர். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக முதல்வர் பழனிச்சாமி உறுதியளித்தார்.
ஆய்வு முடிவில் முதல்வர் பழனிச்சாமி பேசுகையில்; கரோனா நோய் பரவலை குறைப்பதற்கு அதிகமான காய்ச்சல் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது கட்டுக்குள் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நாளொன்றுக்கு 35 காய்ச்சல் முகாம்கள் வீதம் இதுவரை 3,166 காய்ச்சல் முகாம்கள் நடந்துள்ளது. இதில் 43,410 பேர் கலந்துள்ளனர். மாவட்டத்தில் 94 நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. பல்வேறு வகையில் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டு குறைக்கப்பட்டுள்ளது.
தமிழத்தில் தடுப்பணைகள் கட்டுவதற்காக 3 ஆண்டு கால திட்டமாக ரூபாய் 1000 கோடி ஒதுக்கி கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டியுள்ளோம். பயிர் காப்பீட்டு திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 7,911 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5 கோடியே 45 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பண்ணை பணிகளை மேற்கொள்வதற்காக 113 விவசாயிகளுக்கு 113 வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மீன்பிடி தொழில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதானமாக உள்ள நிலையில் புதிய தூண்டில் முறை, சூரை மீன்பிடிப்பு, மற்றும் செவுள்வலை விசைப்படகுகளுக்கு ரூபாய் 60 லட்சத்தில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.30 லட்சம் மானியமாக 16 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒக்கி புயலினால் பாதிக்கப்பட்ட 11 மீனவர்களுக்கு இத்திட்டத்தில் படகு கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள 100 மீனவர்களுக்கு 75 சதவீதம் மானிய விலையில் செயற்கைகோள் தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடப்பாண்டில் மீன்பிடி தடைகால நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் வீதம் 27,517 மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ.76 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இரணியல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 71 சதவீதம் முடிவுற்றுள்ளது. துரிதமாக நடைபெற்று வரும் இப்பணிகள் முடிவுற்றதும் இப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். நாகர்கோவில் மாநகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் ரூ.251 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. 77 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் செயல்பாட்டிற்கு வரும்.அழிக்கால், மேல்மிடாலம், கோவளம், பொழிக்கரை மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும். நாகர்கோவில் மாநகராட்சி 18வது வார்டு கோட்டார் இடலாக்குடி தெருவிற்கு சதாவதானி செய்கு தம்பி பாலவர் தெரு என பெயர் சூட்டப்படும் என்றார்.
குமரி எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு
தமிழக முதல்வர் பழனிச்சாமி நேற்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் பங்கேறற நிகழ்ச்சியை புறக்கணிக்கப்போவதாக ஏற்கனவே குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை எம்.எல்.ஏ.க்களும் அறிவித்திருந்தனர்.
அதன்படி குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் யாரும் நேற்று முதல்வரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் பழனிச்சாமி அருகே உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கினார்.
அவரை அதிமுக குமரி மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். நாகர்கோவிலில் இருந்து இன்று தூத்துக்குடி செல்லும் முதல்வர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும், விருதுநகர் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT