Published : 10 Nov 2020 05:58 PM
Last Updated : 10 Nov 2020 05:58 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் கே.பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார். அப்போது ரூ. 368.75 கோடி மதிப்பிலான பணிகளை தொடங்கி வைக்கிறார்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவரை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் செ.ராஜூ, வி.எம்.ராஜலெட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன், மாவட்ட ஆட்சியர்கள் சந்தீப் நந்தூரி (தூத்துக்குடி), ஷில்பா பிரபாகர் சதீஷ் (நெல்லை), கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோன், தூத்துக்குடி ஆவின் தலைவர் என்.சின்னத்துரை உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சென்ற முதல்வர் அங்கு நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். அங்கிருந்து நாளை (நவ.11) காலை 6,15 மணிக்கு கிளம்பும் முதல்வர் பழனிச்சாமி காலை 8 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்.
தூத்துக்குடி மறவன்மடம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் காலை உணவை முடிக்கும் முதல்வர், காலை 8.45 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ரூ.16 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள லீனியர் ஆக்ஸிலேட்டர் என்ற புற்றுநோய்க்கான நவீன கதிரியக்க சிகிச்சை கருவி மற்றும் ரூ.71.61 லட்சம் மதிப்பிலான மத்திய ஆய்வக கட்டிடம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார்.
பின்னர் காலை 9 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் முதல்வர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
பின்னர் பொதுப்பணித்துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, பள்ளிக் கல்வித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் ரூ.22.37 கோடி மதிப்பிலான 16 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.
மேலும், பொதுப்பணித்துறை, காவல் துறை, கரூவூலம் மற்றும் கணக்குத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, செய்தி மக்கள் தொடர்ப துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் ரூ.328.66 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பல்வேறு துறைகள் சார்பில் 15,792 பயனாளிகளுக்கு ரூ.37.55 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தொடர்ந்து மாவட்டத்தில் நடைபெறும் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்துகிறார்.
பின்னர் சிறு, குறு தொழில்முனைவோர், விவசாயிகள், மீனவர்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடுகிறார். நிறைவாக செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார். பின்னர் மதிய உணவை தூத்துக்குடியில் முடித்துவிட்டு விருதுநகர் செல்கிறார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வரை வரவேற்று அதிமுகவினர் கட்சிக் கொடிகளையும், வரவேற்பு பதாகைகளையும் நகர் முழுவதும் அமைத்துள்ளனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் 2,150 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT