Published : 10 Nov 2020 05:23 PM
Last Updated : 10 Nov 2020 05:23 PM
ஓபிசி உள் ஒதுக்கீடு தொடர்பான ரோகிணி ஆணையத்தின் கடிதத்திற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (நவ. 10) வெளியிட்ட அறிக்கை:
"மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதில், பல்வேறு சாதிகளின் பெயர்கள் தொடர்பாக நீதிபதி ரோகிணி ஆணையம் கோரிய விளக்கங்களுக்கு மாநில அரசுகள் பதிலளிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விஷயத்தில் மாநில அரசுகள் காட்டும் தாமதம் சமூக அநீதியாகும்.
மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 30 ஆண்டுகளும், கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 14 ஆண்டுகளும் நிறைவடைந்துவிட்ட போதிலும், அதன் பயன்கள் இன்னும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள அனைத்துச் சமூக மக்களையும் சென்றடையவில்லை.
இந்த அநீதி குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ரோகிணி ஆணையம், 27% இட ஒதுக்கீட்டின் பயன்கள் அந்த வகுப்பில் உள்ள 983 சாதிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதைக் கண்டறிந்து, அதற்கான புதிய தீர்வுகளை முன்வைத்துள்ளது.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை 3 தொகுப்புகளாகப் பிரித்து இதுவரை இட ஒதுக்கீட்டை அனுபவிக்காத சாதிகளுக்கு 10%, ஓரளவு அனுபவித்த சாதிகளுக்கு 10%, அதிகமாக அனுபவித்த சமூகங்களுக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்று நீதிபதி ரோகிணி ஆணையம் தீர்மானித்திருக்கிறது.
இந்தப் பரிந்துரைகள் மத்திய அரசிடம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதமே வழங்கப்பட்டுவிட்ட போதிலும், இன்னும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை. இதற்குக் காரணம், ஆணையம் தரப்பில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்காக விளக்கங்கள் மாநில அரசுகளால் வழங்கப்படாததுதான்.
மத்திய அரசின் 27% இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 2,633 சாதிகள் உள்ளன. இவற்றில் முதன்மை சாதிகளின் எண்ணிக்கை சில நூறுகளில் மட்டுமே இருக்கும். மீதமுள்ளவை துணை சாதிகள் ஆகும். இவற்றில் துணை சாதிகள் பட்டியலில் ஏராளமான குழப்பங்கள் இருப்பதால், உள் ஒதுக்கீடு பெறும் சாதிகள் பட்டியலை ஆணையத்தால் இறுதி செய்ய முடியவில்லை.
மாநில அரசுகளால் தயாரித்து வழங்கப்பட்ட துணை சாதிகள் பட்டியலில், மாநில மொழியில் உள்ள பெயர்களுக்கும், அவற்றின் ஆங்கில எழுத்துகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல்களில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சேர்க்கைகள், நீக்கல்கள் ஆகியவற்றிலும் ஏராளமான குழப்பங்கள் உள்ளன. சாதிப் பெயர்களில் உள்ள எழுத்துப் பிழைகளையும், பிற குழப்பங்களையும் மாநில அரசுகளின் துணை இல்லாமல் சரி செய்வது சாத்தியமற்றது.
சாதிகளின் பெயர்களிலும், சேர்க்கைகள் மற்றும் நீக்கல்களிலும் உள்ள குறைகளைக் களைந்து தர வேண்டும்; அதுகுறித்த விளக்கங்களையும் அளிக்க வேண்டும் என்று மாநில அரசுகளைக் கடந்த ஆண்டே நீதிபதி ரோகிணி ஆணையம் கேட்டுக்கொண்டது. மாநில அரசுகளும், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இணைந்துதான் இந்தக் குறைகளைச் சரிசெய்து அனுப்ப வேண்டும்.
ஆனால், போதிய மனிதவளம் இல்லை என்று கூறி குறைகளைச் சரிசெய்யும் பணியை மாநில அரசுகள் தாமதம் செய்து வருகின்றன. ஆணையம் கேட்ட விளக்கங்களையும் மாநில அரசுகள் இதுவரை அளிக்கவில்லை. இதனால், நீதிபதி ரோகிணி ஆணையம் அதன் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய முடியவில்லை.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிக மிகப் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நீதிபதி ரோகிணி ஆணையம் 2017-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி அமைக்கப்பட்டது. அடுத்த 3 மாதங்களில் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது.
ஆனால், 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆணையத்தால் அறிக்கை தாக்கல் செய்ய முடியவில்லை. 9-வது முறையாக அளிக்கப்பட்ட கால நீட்டிப்பும் ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. ஆனால், இப்போதுள்ள சூழலில் ஜனவரி மாதத்திற்குள்ளாக நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்பில்லை.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைந்துவிட்ட நிலையில், 983 சாதிகளால் அதன் பயனை இன்று வரை அனுபவிக்க முடியவில்லை என்பது மிகவும் கொடுமையானது. அக்கொடுமையை எவ்வளவு விரைவாக முடிவுக்குக் கொண்டு வர முடியுமோ, அவ்வளவு விரைவாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அதற்கு ரோகிணி ஆணையத்தின் அறிக்கை விரைவாகத் தாக்கல் செய்யப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
ஆனால், ஆணையம் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் அறிக்கை தாக்கல் செய்யப்படாதது பெரும் ஏமாற்றமளிக்கிறது. இந்தக் கொடுமை நீடிப்பதை அனுமதிக்கக் கூடாது. அதற்காக நீதிபதி ரோகிணி ஆணையம் கோரிய அனைத்து விளக்கங்களையும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும்; அதன்மூலம் ஓபிசி வகுப்பினரில் சில பிரிவுக்கு இழைக்கப்படும் அநீதியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT