Last Updated : 10 Nov, 2020 12:29 PM

 

Published : 10 Nov 2020 12:29 PM
Last Updated : 10 Nov 2020 12:29 PM

அரசு அருங்காட்சியகங்கள் செயல்படத் தொடங்கின: கீழடி உள்ளிட்ட அகழ் வைப்பகங்கள் திறப்பு எப்போது?

பொதுமுடக்கத் தளர்வின் ஒரு பகுதியாக இன்று முதல் திரையரங்குகளும், அரசு அருங்காட்சியகங்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தின் பெருமையையும், பழமையான நாகரிகத்தையும் பறைசாற்றும் கீழடி அகழ் வைப்பகம் உள்ளிட்ட அகழ் வைப்பகங்கள் இன்று திறக்கப்படவில்லை.

பொதுவாக அருங்காட்சியகங்கள் என்றால், அங்கே பண்டைக்கால மக்கள் புழங்கிய பொருட்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள், பழங்கால நாணயங்களுடன் பாடம் செய்யப்பட்ட விலங்குகள், பறவைகள், பட்டாம்பூச்சிகளும் கூடக் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால், மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் செயல்படும் கீழடி அகழாய்வு வைப்பகத்தில், முழுக்க முழுக்க கீழடியில் கிடைத்த பொருட்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முழுமையாக ஓரிடத்தில் கிடைத்த பொருட்களைக் கொண்டு மட்டுமே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரே அருங்காட்சியகம் என்ற சிறப்பு இதற்கு உண்டு.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்ட அரசு அருங்காட்சியகங்களை இன்று முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடவே, அருங்காட்சியகங்களில் பின்பற்றப்பட்ட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது.

இதன்படி, மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் அமைந்துள்ள தமிழக அரசு அருங்காட்சியகம் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆனால், கீழடி அருங்காட்சியகம் இன்று திறக்கப்படவில்லை. இது பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மதுரை மாவட்டத் தொல்லியல் அலுவலர் சக்திவேலிடம் கேட்டபோது, "மற்ற அருங்காட்சியகங்களுடன் சேர்த்துக் கீழடி அருங்காட்சியகத்தையும் திறப்பதாகத்தான் இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்றே இதற்கான உத்தரவும் வந்தது. ஆனால், நேற்றிரவு அதனைத் தள்ளிவைத்து விட்டார்கள். இன்று அரசு அருங்காட்சியகத் துறையின் கீழ் உள்ள அருங்காட்சியகங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

தொல்லியில் துறையின் கீழ் உள்ள அருங்காட்சியகங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களுடன் கூடிய அருங்காட்சியகங்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. எனவே, மறு உத்தரவு வரும்வரையில் தொல்லியல் துறையின் கீழ் உள்ள அருங்காட்சியகங்கள் திறக்கப்படாது. அதனால்தான் கீழடி அகழ் வைப்பகமும், திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அருங்காட்சியகமும் இன்று திறக்கப்படவில்லை" என்றார்.

இதேபோல ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள சேதுபதி மன்னர்கள் கால அகழ் வைப்பகம், தஞ்சாவூரில் உள்ள ராஜராஜ சோழன் அகழ்வைப்பகம், குற்றாலத்தில் உள்ள நாட்டுப்புறவியல் அகழ் வைப்பகம் உள்ளிட்ட 14 அகழ் வைப்பகங்களும் இன்று திறக்கப்படவில்லை.

இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கீழடியில் நிரந்தர அகழ் வைப்பகம் கட்டிவிட வேண்டும் என்று கட்டிடப் பணிகளைத் தொல்லியல் துறையினர் மும்முரமாகச் செய்து வருகிறார்கள். அந்தக் கட்டிடம் கட்டப்பட்டதும் உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கீழடி தொடர்பான பொருட்கள் அனைத்தும் அங்கே மாற்றப்படும் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x