Published : 10 Nov 2020 12:13 PM
Last Updated : 10 Nov 2020 12:13 PM

பத்திரிகையாளர் மோசஸ் கொலை; ஊடகத்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது அரசின் கடமை: முத்தரசன்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

பத்திரிகையாளர் மோசஸ் கொலை செய்யப்பட்டதற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (நவ. 10) வெளியிட்ட அறிக்கை:

"தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் (27), சட்ட விரோதக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மோசஸ் தனியார் தொலைக்காட்சியில் பகுதி நேரச் செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். இந்தப் பகுதியில் நடைபெறும் சட்ட விரோத, சமூக விரோதச் செயல்களைத் துப்பறிந்து ஆதாரபூர்வமாகச் செய்திகளை வெளியிட்டு வந்தவர் மோசஸ்.

இதன் தொடர்ச்சியாக இப்பகுதியில் அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பது, கஞ்சா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்வது ஆகிய சமூக விரோதச் செயல்கள் குறித்து அண்மையில் ஆதாரபூர்வமாக தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டார்.

இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டு வரும் சமூக விரோதக் கும்பல்கள் கூட்டுச் சேர்ந்து செய்தியாளர் மோசஸைக் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளன. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத் துறையின் சுதந்திரத்தையும், அதில் பணிபுரிகிற செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், நிழற்பட நிருபர்கள் அனைவரையும் பாதுகாப்பது அரசின் கடமைப் பொறுப்பாகும்.

இந்தச் சம்பவத்தில் உயிர் பலியான மோசஸ் குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி வழங்கிப் பாதுகாக்க வேண்டுமென்று, தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்".

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x